செய்திகள்

நீர் மேலாண்மை திட்டத்தில் அரசு மந்தமாக செயல்படுகிறது- துரைமுருகன் குற்றச்சாட்டு

Published On 2018-12-19 08:09 GMT   |   Update On 2018-12-19 08:09 GMT
நீர் மேலாண்மை திட்டத்தை பொறுத்தவரை அரசு மந்தமாக செயல்பட்டு வருகிறது என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார். #DMK #DuraiMurugan #TNGovt
நெல்லை:

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் தலைமையிலான தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழுவினர் இன்று நெல்லை வந்தனர். இந்த குழுவில் எம்.எல்.ஏ.க்கள் முகம்மது அபுபக்கர் (கடையநல்லூர்), பரமசிவம் (வேடசந்தூர்), ராஜா (மன்னார்குடி) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழுவினர் மற்றும் அதிகாரிகள் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப்பணிகளை ஆய்வு செய்தனர்.

பாளை வடக்கு ஐகிரவுண்டு சாலையில் உள்ள மனகாவலம்பிள்ளை பூங்கா மற்றும் மாநகராட்சி சார்பாக அங்கு அமைக்கப்பட்டுள்ள மட்கும் குப்பைகளை உரமாக்கும் கிட்டங்கியை குழுவினர் பார்வையிட்டனர்.

பின்பு அவர்கள் மூன்றடைப்பு அருகே நடைபெற்று வரும் வெள்ளநீர் கால்வாய் திட்டப்பணிகளை பார்வையிட்டனர். இதைத் தொடர்ந்து நெல்லை டவுனில் உள்ள கல்லணை மாநகராட்சி பெண்கள் பள்ளியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். குழுவினருடன் நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உடன் சென்றார்கள். இந்த ஆய்வின்போது பொது கணக்கு குழு தலைவர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-


கடந்த தி.மு.க. ஆட்சியில் ரூ.369 கோடி செலவில் வெள்ள நீர் கால்வாய் திட்டம் தொடங்கப்பட்டது. 2 கட்ட பணிகள் நடந்துள்ள நிலையில் பின்னர் வந்த அ.தி.மு.க. அரசு இந்த திட்டத்தை கிடப்பில் போட்டது. தற்போது மத்திய அரசின் நதிநீர் இணைப்பு திட்டத்தின் மூலம் நிதிபெற்று ரூ.840 கோடி செலவில் 3-வது கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகள் 2020-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக நிலம் வழங்கியவர்களுக்கு முழு பணமும் வழங்க தயாராக இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். நீர் மேலாண்மை திட்டத்தை பொறுத்தவரை அரசு மந்தமாக செயல்பட்டு வருகிறது.

மழை காலத்தில் எந்த கால்வாயையும் பராமரிக்க முடியாது. மழைக்கு முன்பே கால்வாய்கள் பராமரிக்கப்படவேண்டும். கால்வாய்கள் தூர்வாரப்பட்டு கடைமடை பகுதிக்கும் தண்ணீர் செல்ல வகை செய்திருக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை தொடர்ந்து குழுவினர் குற்றாலம் ஐந்தருவி சாலையில் உள்ள சூழலியல் பூங்காவை பார்வையிட்டனர். தொடர்ந்து நாளையும் மாவட்டத்தில் ஆய்வுப்பணியில் ஈடுபடுகிறார்கள். நாளை கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.  #DMK #DuraiMurugan #TNGovt
Tags:    

Similar News