செய்திகள்

எண்ணூரில் யானை தந்தங்களை பதுக்கிய 4 பேர் சிக்கினர்

Published On 2018-12-18 06:28 GMT   |   Update On 2018-12-18 06:28 GMT
எண்ணூரில் யானை தந்தங்களை பதுக்கி வைத்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பூந்தமல்லி:

பூந்தமல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வீடுபுகுந்து கொள்ளை மற்றும் வழிப்பறியில் ஈடுபடும் கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் நடத்தி வந்தனர்.

இதில் போரூரை சேர்ந்த வசந்த், திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த ராஜ்குமார் ஆகிய 2 கொள்ளையர்கள் போலீசாரிடம் சிக்கினார்கள்.

அவர்களின் செல்போன்களை ஆய்வு செய்த போது, அதில் யானை தந்தங்களின் புகைப்படங்கள் இருந்தன.

இது பற்றி அவர்களிடம் விசாரித்த போது இடைத்தரகர் பிரவின் குமார் என்பவர் அனுப்பியதாக தெரிவித்தனர். இதையடுத்து இடைத்தரகர் பிரவின் குமாரை போலீசார் அழைத்து வந்து விசாரித்தனர்.

அதில் எண்ணூரை சேர்ந்த சின்ராஜ் என்பவர் வீட்டில் யானை தந்தங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதும், அதை விற்பனை செய்வதற்காக பலருக்கு செல்போனில் புகைப்படம் எடுத்து அனுப்பியதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து சின்ராஜ் வீட்டுக்கு சென்ற போலீசார் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த யானைத் தந்தங்களை பறிமுதல் செய்தனர்.

யானை தந்தங்களை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே சின்ராஜ் பதுக்கி வைத்திருந்துள்ளார். அதை விற்க முயற்சி செய்த போது விலை படியாததால் வீட்டிலேயே வைத்து இடைத்தரகர் மூலம் பேரம் பேசி வந்திருப்பது தெரிய வந்தது.

யானை தந்தங்கள் எங்கிருந்து கடத்தி கொண்டு வரப்பட்டது. இதில் யாருக்கு சம்பந்தம் உள்ளது என்பது தொடர்பாக சின்ராஜ், பிரவின் குமார் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வனத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags:    

Similar News