செய்திகள்

கரையை நெருங்கும் பெய்ட்டி புயல்: சென்னையில் பலத்த காற்று

Published On 2018-12-16 05:52 GMT   |   Update On 2018-12-16 06:08 GMT
பெய்ட்டி புயல் கரையை நெருங்கி வரும் நிலையில், சென்னையில் பலத்த காற்று வீசி வருகிறது. நாளை மசூலிப்பட்டினத்திற்கும், காக்கி நாடாவிற்கும் இடையே கரையை கடக்கிறது.
சென்னை:

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள ‘பெய்ட்டி’ புயல் சென்னைக்கு தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. சென்னை நோக்கி தொடர்ந்து நகர்ந்து வரும் இந்தப் புயல் இன்று தீவிர புயலாக மாறி வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (17-ந்தேதி) மாலை ஆந்திரா கடற்கரையில் மசூலிப்பட்டினத்திற்கும், காக்கி நாடாவிற்கும் இடையே கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புயல் ஆந்திரா நோக்கி நகர்வதால் சென்னைக்கு பாதிப்பு எதுவும் இருக்காது. ஆனால், சென்னை மற்றும் வடதமிழகத்தில் மணிக்கு 55 முதல் 65 கி.மீ. வேகத்திலும், அதிக பட்சம் 75 கி.மீ. வேகத்திலும் பலமான சூறைக்காற்று வீசுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். காற்றில் புழுதி பறந்ததால் நடந்து சென்ற மக்கள் அவதிப்பட்டனர். எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லை. காலையில் லேசாக தூறியது.

இந்த நிலையில் வட தமிழகத்தின் கடலோர பகுதியில் மிதமான மழையும், ஒருசில இடங்களில் கன மழையும் பெய்யும் என்றும் தென்மேற்கு வங்க கடல் மற்றும் மேற்கு மத்திய வங்க கடல் பகுதிக்கு மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

புயல் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்வதால் கடலோர ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று தென்மேற்கு வங்க கடல் மற்றும் மேற்கு மத்திய வங்க கடல் பகுதியில் மணிக்கு 80 முதல் 100 கி.மீ. வேகத்திலும், அதிகபட்சம் 110 கி.மீ. வேகத்திலும் காற்று வீசும், கடற்கரை பகுதியில் மணிக்கு 60 முதல் 70 கி.மீ. வேகத்திலும் அதிகபட்சம் 80 கி.மீ. வேகத்திலும் காற்று வீசும், கடல் அலைகள் பல மீட்டர் உயரத்துக்கு எழும்பி கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புயல் நாளை (17-ந்தேதி) கரையை கடந்த பின்பு வலு இழந்த புயலாகவும், 18-ந்தேதி காற்றழுத்த மண்டலமமாகவும் நிலைபெறும் என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
Tags:    

Similar News