செய்திகள்

8 வழி சாலைக்கு 11 சதவீதம் பேர் தான் எதிர்ப்பு- முதலமைச்சர் பழனிசாமி பேட்டி

Published On 2018-12-15 06:45 GMT   |   Update On 2018-12-15 06:45 GMT
சேலம்-சென்னை 8 வழி பசுமைசாலைக்கு 89 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் 11 சதவீதம் பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #Edappaipalaniswami
ஓமலூர்:

சேலம் மாவட்டம் ஓமலூரில் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கேள்வி: காவிரிப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அழைப்பு விடுத்துள்ளது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்: காவிரி பிரச்சனை 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த பிரச்சனையில் கடுமையான சட்டப் போராட்டம் நடத்தி தற்போது உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கி உள்ளது. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு படி தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. மேகதாது பிரச்சனையில் அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க தடை கேட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அதன் அடிப்படையில் கர்நாடக அரசுக்கு நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரிக்கவில்லை.


கே: எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்களே?

பதில்: சேலம்-சென்னை 8 வழி பசுமைசாலைக்கு 89 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 11 சதவீதம் பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாயிகள் உள்ளிட்ட யாரையும் பாதிப்புக்கு உள்ளாக்குவது தமிழக அரசின் நோக்கம் இல்லை. ஒட்டுமொத்த பொது மக்களின் நலனுக்காகவும் இந்தியாவிலேயே இரண்டாவது பசுமை வழிச்சாலையான 8 வழி சாலை திட்டம் தமிழகத்திற்கு செயல்படுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் தொழில் வளத்தில் தமிழகம் பெரிய அளவில் வளரும் வாய்ப்புள்ளது. எட்டு வழி சாலை திட்டத்திற்கு கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு தேவையான இழப்பீடு வழங்கப்படும் என அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. தென்னை மரம், மா மரத்திற்கு, உரிய இழப்பீடு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #TNCM #Edappaipalaniswami #greenexpressway
Tags:    

Similar News