செய்திகள்

கழிவறை கேட்டு சிறுமி நடத்திய போராட்டம் வெற்றி - உடனடியாக கட்டிக்கொடுக்க கலெக்டர் உத்தரவு

Published On 2018-12-12 01:08 GMT   |   Update On 2018-12-12 01:08 GMT
கழிவறை கேட்டு சிறுமி நடத்திய போராட்டம் வெற்றி பெற்றது. அவரது வீட்டில் உடனடியாக கழிவறை கட்டிக்கொடுக்க நகராட்சி கமிஷனருக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். #Toilet
வேலூர்:

வேலூர் மாவட்டம், ஆம்பூர் நடராஜபுரம் பகுதியை சேர்ந்த கூலிதொழிலாளி இஷானுல்லா. இவரது மகள் ஹனீபாஜாரா (வயது 7). ஆம்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறாள். இஷானுல்லா குடும்பம் வறுமையில் காணப்பட்டதால் வீட்டில் கழிவறை வசதி கிடையாது. அதனால் குடும்பத்தினர் திறந்தவெளியில் கழிப்பிடம் செல்ல வேண்டிய நிலை காணப்பட்டது.



இதனால் அவதியடைந்த ஹனீபாஜாரா தனது தந்தையிடம் வீட்டில் கழிவறை கட்டி தரக்கோரி பலமுறை கேட்டுள்ளார். அதற்கு தந்தை பள்ளியில் முதலிடம் பிடித்தால் வீட்டில் கழிவறை கட்டி தருவதாக கூறியுள்ளார். இதையடுத்து சிறுமி நன்கு படித்து எல்.கே.ஜி. முதல் 2-ம் வகுப்பு வரையிலும் பள்ளியில் முதலிடம் பெற்று வந்தாள். ஆனால் தந்தை கூறியப்படி கழிவறை கட்டிதரவில்லை. கழிவறை கட்டும்படி தந்தையிடம் தொடர்ந்து போராடி வந்தார்.

இதனால் ஏமாற்றம் அடைந்த சிறுமி திறந்தவெளியை கழிவறையாக பயன்படுத்துவது அவமானமாக இருப்பதாகவும், தன்னை ஏமாற்றி வரும் தந்தை மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், கழிவறை கட்டி தருவதாக எழுத்துமூலம் உறுதி பெற்றுத் தரும்படி கோரி தன்னுடைய கைப்பட புகார் மனு எழுதி மனுவுடன் ஆம்பூர் மகளிர் போலீஸ் நிலையம் சென்றார்.



அப்போது அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் வளர்மதி மனுவை வாங்கி படித்து அதிர்ச்சியடைந்தார். இருப்பினும் அவர், சிறுமியின் தொடர் போராட்டத்தையும், தூய்மை, பாதுகாப்பு ஆகியவற்றின் மீது அவருக்கு உள்ள உறுதியையும் பார்த்து பாராட்டினார்.

பின்னர் போலீசார், சிறுமியின் பெற்றோர் மற்றும் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சுப்பிரமணியனை அழைத்து பேசினார். அதைத்தொடர்ந்து சிறுமி, தனது தாயுடன் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று மனு அளித்தார்.

இந்த நிலையில் சிறுமி ஹனீபாஜாரா தனது வீட்டில் கழிவறை கட்டித்தர எடுத்து வரும் முயற்சி குறித்து அறிந்த வேலூர் மாவட்ட கலெக்டர் ராமன், ஆம்பூர் நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதியை தொடர்பு கொண்டு சிறுமியின் வீட்டிற்கு உடனடியாக தனிநபர் கழிவறை கட்டி கொடுக்கும்படி உத்தரவிட்டார். மேலும் திறந்தவெளியை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவிக்கு ஏற்பட்டுள்ள விழிப்புணர்வும், அதற்காக அவர் மேற்கொண்ட தொடர் முயற்சிக்கும் கலெக்டர் ராமன் பாராட்டு தெரிவித்தார்.

ஹனீபாஜாரா வீட்டில் உடனடியாக கழிவறை கட்டும் பணியை நகராட்சி சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஹனீபாஜாராவை கவுரவிக்கும் வகையில் ஆம்பூர் நகராட்சியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் தூதுவராக அவரை நியமித்து நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி உத்தரவிட்டார்.
Tags:    

Similar News