செய்திகள்
குழந்தைகள் வார்டு பிரிவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி அங்குள்ள நர்சுகளிடம் விசாரணை நடத்தினர்.

அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை- பணியாளர்களிடம் இருந்து லஞ்ச பணம் பறிமுதல்

Published On 2018-12-07 10:21 GMT   |   Update On 2018-12-07 10:21 GMT
அரசு மருத்துவமனைகளில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையின்போது, பணியாளர்களிடம் இருந்து லஞ்ச பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. #TNGovtHospitals #VigilanceRaid
சென்னை:

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளிடமும் அவர்களது உறவினர்களிடமும் மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாக ஏராளமான புகார்கள் எழுந்தன. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்கள்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். மருத்துவமனை டீன் ஜெயந்தியிடம் விசாரணை நடத்திய போலீசார் லஞ்சப் புகார் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் விரிவாக விசாரித்தனர்.

திருவல்லிக்கேணி கஸ்தூரிபா மருத்துவமனையிலும் சோதனை நடத்தப்பட்டது. பிரசவத்துக்கு பின்னர் ஆண் குழந்தையை காட்டுவதற்கு ரூ.1000-மும், பெண் குழந்தையை காட்டுவதற்கு ரூ.500-ம் கேட்பதாக அங்கிருந்தவர்கள் குற்றம் சாட்டினர்.

ஊழியர்களின் வருகை பதிவேட்டை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு செய்தனர்.

இதேபோல் எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை, திருவள்ளூர் அரசு மருத்துவமனை, கடலூர் அரசு மருத்துவமனை என தமிழகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளில் லஞ்ச வேட்டை நடத்தப்பட்டது.

இந்த சோதனையின்போது பல்வேறு பகுதிகளில் லஞ்சப் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. கடலூர் அரசு மருத்தவமனையில் உள்ள பணியாளர்களிடம் 4000 ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் பெண் பணியாளர் ஒருவரிடம் இருந்து ரூ.10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. #TNGovtHospitals #VigilanceRaid
Tags:    

Similar News