செய்திகள்

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்படுமா?- அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2018-12-04 04:30 GMT   |   Update On 2018-12-04 04:30 GMT
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்படுமா? என்ற கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார். #Sengottaiyan #GajaCyclone
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் குருமந்தூர் மேட்டில் நம்பியூர் பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கோபி அரசு உதவி பெறும் வைர விழா பழனியம்மாள் மேல்நிலைப் பள்ளி மாணவ- மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோருக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு சைக்கிள்கள் வழங்கினார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசு அனைத்து துறைகளிலும் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. மாணவர்களின் எதிர்கால நலனை மனதில் கொண்டு பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்ட பள்ளிகளில் இதுவரை பாடங்கள் முடிக்கப்படாமல் உள்ளது. இதனால் அரையாண்டு தேர்வை தள்ளி வைப்பதில் சிரமம் உள்ளதாக துறை ரீதியாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அரசு பரிசீலனை செய்து வருகிறது.

புதிய பாடத்திட்டத்தில் வரலாறு பாடத்தில் ஆங்கிலேயர்களின் பெருமை அதிகம் இடம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வரலாற்றை பொருத்தவரை தேசிய தலைவர்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகள் போன்றவர்களுடைய வரலாறும் இடம் பெற்றுள்ளது.

ஒரு கல்வி மாவட்டத்தில் இருந்து மற்றொரு கல்வி மாவட்டத்திற்கு பொதுத் தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் கவலைப்பட தேவையில்லை. கல்வி மாவட்டங்கள் வேறாக இருந்தாலும் மதிப்பெண்கள் வழங்குவதில் எந்த குறைபாடும் இருக்காது.


ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தால் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் முதல்வருடன் பேசி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திண்டிவனத்தில் தரமற்ற சைக்கிள்கள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஜனவரி 1-ந் தேதி முதல் பள்ளிகளில் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் மழலையர் பள்ளிகள் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Sengottaiyan #HalfYearlyExam #GajaCyclone
Tags:    

Similar News