செய்திகள்

கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு - வாலிபர் கைது

Published On 2018-12-02 17:58 GMT   |   Update On 2018-12-02 17:58 GMT
குமராட்சி பகுதியில் 4 கோவில்களில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். தப்பிச்சென்ற அவரது தம்பியை வலைவீசி தேடி வருகின்றனர்.
காட்டுமன்னார்கோவில்:

குமராட்சி அருகே கீழபருத்திக்குடியில் ருத்திரபசுதிஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும், பூசாரி கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நள்ளிரவில் 2 பேர், கோவில் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த உண்டியலை உடைத்து, அதில் இருந்த பணத்தை திருடினர்.

இதேபோல் ஒற்றை பாளையம் மாரியம்மன் கோவில், குலுந்தா அப்பன் ஆகிய கோவில்களிலும் பூட்டை உடைத்து, அங்கிருந்த உண்டியலில் இருந்த பணத்தை 2 பேரும் திருடினர். மேலும் வெள்ளூர் முனீஸ்வரர் கோவில் பூட்டையும் உடைத்த அவர்கள், உள்ளே சென்று உண்டியலில் இருந்த பணத்தை திருடினர். அப்போது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர்.

இதை பார்த்ததும் 2 பேரும் பணத்தை திருடிவிட்டு, தாங்கள் வந்திருந்த மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்றனர். இது குறித்து கிராம மக்கள், குமராட்சி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் குமராட்சி-புளியங்குடி சாலையில் ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி, அதில் வந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். அந்த சமயத்தில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று விட்டார். ஒருவர் மட்டும் போலீசில் சிக்கினார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர், அரியலூர் மாவட்டம் சலுப்பை கிராமத்தை சேர்ந்த பாலமுருகன்(வயது 30) என்பதும், தப்பிச்சென்றவர் அவரது தம்பி அருண்குமார் என்பதும், இருவரும் சேர்ந்து 4 கோவில்களில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியதும், அந்த பணத்துடன் அருண்குமார் தப்பிச்சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து பாலமுருகளை போலீசார் கைது செய்தனர். அருண்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர். 
Tags:    

Similar News