செய்திகள்

வெள்ளகோவில் அருகே பழைய கார் விற்பனை கடையில் பணம் திருட்டு - வாலிபர்கள் கைது

Published On 2018-12-01 10:13 GMT   |   Update On 2018-12-01 10:13 GMT
வெள்ளகோவில் அருகே பழைய கார் விற்பனை கடையில் பணம் திருடிய வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெள்ளகோவில்:

திருப்பூர் மாவட்டம் முத்தூர் அஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்குமார் (வயது 28). இவர் கடந்த 5 ஆண்டுகளாக முத்தூரில் பழைய கார் விற்பனை நடத்தி வருகிறார்.

நேற்று வழக்கம்போல் அலுவலகத்திற்கு வந்தார். மதியம் மின் கட்டணம் செலுத்த சென்றார். மின் கட்டணம் செலுத்திய பின்னர் மீண்டும் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது கல்லாவில் இருந்த ரூ.64 ஆயிரத்து 500 திருட்டுபோனது தெரியவந்தது. இதனையடுத்து அதிர்ச்சியடைந்தார்.

இந்நிலையில் வெள்ளகோவிலில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேரும், மற்றொரு மோட்டார் சைக்கிளில் 3 பேரும் வந்தனர். போலீசாரை பார்த்ததும் 5 பேரும் தப்பி ஓட முயன்றனர். உஷாரான போலீசார் அவர்களை விரட்டிச்சென்றனர். ஆனால் தப்பினர்.

இது குறித்து முத்தூர் பகுதியில் உள்ள போலீசாருக்கு தெரிவித்தனர். அங்கிருந்த போலீசார் பொதுமக்கள் உதவியுடன் 3 பேர் வந்த மோட்டார் சைக்கிளை மடக்கிப்பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது ரூ.64 ஆயிரத்து 500 மற்றும் 2 லேப்- டாப்புகள் இருந்தது.

விசாரணையில் முத்தூரில் ராஜேஸ்குமார் நடத்தி வரும் கடையில் புகுந்து திருடியதை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து பணத்தையும், லேப்- டாப்களையும் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் அவர்கள் ஈரோடு லட்சுமி நகர் வெண்டிப்பாளையம் ரோடு பகுதியை சேர்ந்த ரஞ்சித் (வயது 19), நோயல் எபினேஷ் (18), மகேஸ்வரன் (18) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் மீது ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது.

கடை உரிமையாளர் ராஜேஸ்குமார் இது குறித்து வெள்ளகோவில் போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய மற்ற 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News