செய்திகள்

ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது அளித்த சிகிச்சை என்ன? அப்பல்லோ டாக்டர்களின் வாக்குமூலத்தால் குழப்பம்

Published On 2018-12-01 01:13 GMT   |   Update On 2018-12-01 01:13 GMT
ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது அளித்த சிகிச்சை என்ன? என்பது தொடர்பாக அப்பல்லோ டாக்டர்கள் அளித்த முரண்பட்ட வாக்குமூலத்தால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. #jayalalithaadeath #jayalalithaa
சென்னை:

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. தற்போது விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

2016-ம் ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்ட போது அவருக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனையின் இதயம் மற்றும் நுரையீரல் நோய் தடுப்பு சிறப்பு மருத்துவ நிபுணர்கள் ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர்.

மாரடைப்பு ஏற்பட்டபோது அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அவர்கள் முரண்பட்ட தகவல்களை அளித்து உள்ளனர்.

அதாவது டாக்டர் ரமேஷ்வெங்கட்ராமன், ‘ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதும் அறுவை சிகிச்சை மூலம் பிளந்து (செனாடமி) இதயம் மசாஜ் செய்யப்பட்டது. செனாடமி மேற்கொள்வதற்கு 20 நிமிடங்கள் ஆனது’ என்று கூறி உள்ளார்.

டாக்டர் நரசிம்மன், ‘செனாடமி என்ற அறுவை சிகிச்சையை மேற்கொள்ள 15 நிமிடங்கள் ஆனது’ என்று தெரிவித்துள்ளார்.

டாக்டர் சுந்தர், ‘ஜெயலலிதாவுக்கு இதயம் செயல் இழந்ததும் சி.பி.ஆர். என்ற சிகிச்சை 45 நிமிடங்கள் அளிக்கப்பட்டது. அப்படி இருந்தும் இதயம் துடிக்கவில்லை. எனவே, 10 நிமிடங்களில் செனாடமி மேற்கொள்ளப்பட்டது’ என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

டாக்டர் மின்னல் ஓரா, ‘ஒரே நேரத்தில் செனாடமி அறுவை சிகிச்சையும், சி.பி.ஆர். சிகிச்சையும் மாறி மாறி மேற்கொள்ளப்பட்டது. செனாடமி சிகிச்சை மேற்கொள்ள 30 நிமிடம் ஆனது’ என்று கூறி உள்ளார்.

டாக்டர் மதன்குமார், ‘மாறி மாறி 2 சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது’ என்று தெரிவித்துள்ளார்.

5.12.2016 அன்று எய்ம்ஸ் டாக்டர்கள் வந்து பார்த்த போது, ஜெயலலிதா உடலை குளிர்ச்சி நிலையில் வைத்துள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில் அவரது உடல்நிலை குறித்து எதுவும் சொல்ல முடியாது என்றும், எனவே, சாதாரண வெப்பநிலைக்கு உடலை கொண்டு வரும்படியும் எய்ம்ஸ் டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

அதன்படி, சாதாரண வெப்பநிலைக்கு ஜெயலலிதாவின் உடல்நிலை கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்பின்பு தான் ஜெயலலிதாவின் இதயம் செயல்படவில்லை என்பதை உறுதி செய்து அன்றைய தினம் இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்து விட்டார் என்பதை எய்ம்ஸ் டாக்டர்கள் உறுதி செய்துள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.



அப்பல்லோ டாக்டர்களின் முரண்பட்ட வாக்குமூலத்தால் டிசம்பர் 4-ந் தேதி ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? என்பதில் ஆணையத்துக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டது.

சென்னை ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரி டீன் ஜெயந்தி மூலம் இந்த குழப்பத்துக்கு தீர்வு காண முடிவு செய்த ஆணையம் அவரை நேரில் ஆஜராக உத்தரவிட்டது. அதன்படி டீன் ஜெயந்தி நேற்று ஆணையத்தில் ஆஜரானார்.

அவரிடம், செனாடமி அறுவை சிகிச்சை, சி.பி.ஆர். சிகிச்சை குறித்து நீதிபதி கேட்டார்.

அதற்கு அவர், அரசு ஆஸ்பத்திரியில் இதுவரை செனாடமி அறுவை சிகிச்சை மேற்கொள்ளவில்லை என்றும், கடைசி முயற்சியாக சி.பி.ஆர். என்ற சிகிச்சை மட்டுமே மேற்கொள்ளப்படுவதாகவும் கூறி உள்ளார்.

செனாடமி அறுவை சிகிச்சையும், சி.பி.ஆர். சிகிச்சையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளலாம் என்று பாடத்தின் மூலம் தெரிந்து கொண்டதாகவும், இதுதொடர்பாக அனுபவம் எதுவும் இல்லை என்றும் அவர் கூறி உள்ளார்.

மேற்கண்ட தகவலை ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. #jayalalithaadeath #jayalalithaa
Tags:    

Similar News