செய்திகள்

வள்ளியூரில் பெண் கொலை- வாலிபருக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்க கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2018-11-29 11:46 GMT   |   Update On 2018-11-29 11:46 GMT
வள்ளியூரில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கைதான வாலிபருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வள்ளியூர்:

குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பெருஞ்சிலம்பு, வலியவிளை கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் மெர்சி (வயது23). இவர் வள்ளியூரில் தங்கி இருந்து அங்குள்ள பிரபல ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

அதே கடையில் திருக்குறுங்குடி அருகே உள்ள மகிழடி கிராமத்தை சேர்ந்த ரவீந்திரன் (31) என்பவரும் ஊழியராக வேலை பார்த்து, 15 நாட்களுக்கு முன்பு வேலையை விட்டு நின்று விட்டார். ரவீந்திரனும், மெர்சியும் வேலை பார்க்கும் போது அடிக்கடி பேசி பழகினர். இதில் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது.

பின்னர் ரவீந்திரன் வேலையை விட்டு நின்று விட்டதால், மெர்சி அவருடன் பேசி பழகுவதை நிறுத்தி விட்டார்.

இதில் ஆத்திரம் அடைந்த ரவீந்திரன் நேற்று முன்தினம், மெர்சியை வள்ளியூர் பஸ் நிலையம் அருகே அழைத்து பேசி கொண்டு இருந்தார். அப்போது அவர் தன்னை திருமணம் செய்ய வலியுறுத்தி உள்ளார். ஆனால் மெர்சி அதற்கு மறுத்தார். இதனால் ஆத்திரத்தில் இருந்த ரவீந்திரன், மெர்சியை கத்தியால் சரமாரி குத்தி கொலை செய்தார். இந்த சம்பவம் வள்ளியூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக வள்ளியூர் டி.எஸ்.பி. கனகராஜ், இன்ஸ்பெக்டர் அனிதா, சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவீந்திரனை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர், “தன்னை காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்ததால், மெர்சியை குத்தி கொலை செய்ததாக” வாக்குமூலம் அளித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரிடம் இருந்து கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தியை பறிமுதல் செய்தனர். அவரை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் கைதான ரவீந்திரனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட மெர்சி குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று வலியவிளை கிராம மக்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மனோ தங்கராஜ், பிரின்ஸ் உள்பட ஏராளமானவர்கள் குமரி மாவட்டம் குமாரபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். #tamilnews
Tags:    

Similar News