செய்திகள்
முக்கண்ணாமலைப்பட்டியில் மின்வாரிய ஊழியர்களுக்கு கிராம மக்கள் பிரியாணி விருந்து அளித்தனர்.

இரவு, பகலாக உழைத்த மின்வாரிய ஊழியர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்து அசத்திய கிராம மக்கள்

Published On 2018-11-28 05:09 GMT   |   Update On 2018-11-28 05:09 GMT
அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டியில் ஊர்பொதுமக்கள் சார்பில் இரவு, பகலாக உழைத்த மின்சார வாரிய ஊழியர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்து அசத்தினர். #GajaCyclone
விராலிமலை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. அன்னவாசலை சுற்றியுள்ள பல பகுதிகளில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

மேலும் அந்த பகுதிகளில் உள்ள அரசு கட்டிடங்கள், பொது வழிப்பாட்டு தலங்கள் மற்றும் சாலைகளில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்துள்ளது. புயலுக்கு தப்பிக்க முடியாமல் வீடுகளில் உள்ள மேல்கூரைகள், சேதம் அடைந்தன.

கிராம பகுதிகள் மற்றும் வயல் வெளிகளில் உள்ள மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதால் அன்னவாசலை சுற்றியுள்ள பல பகுதிகளில் மின்சார பணிகள் முடிந்து படிப்படியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அன்னவாசல் பகுதிகளில் வெளி மாவட்டங்களில் இருந்து மின்சார வாரிய பணியாளர்கள் மின்கம்பங்களை மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த நிலையில் நேற்று அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டியில் ஊர்பொதுமக்கள் சார்பில் இரவு, பகலாக உழைத்த மின்சார வாரிய ஊழியர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்து அசத்தினர்.

இதுகுறித்து மின்வாரிய பணியாளர் ஒருவர் கூறியதாவது:-

நாங்கள் 40 பேரும் சேலம் பகுதியை சேர்ந்தவர்கள். இரண்டு பிரிவுகளாக பிரிந்து அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டி பகுதியில் ஒரு திருமண மண்டபத்தில் தங்கி சுற்றுப்புற பகுதிகளில் வேலை பார்த்து வருகிறோம். இப்பகுதி பொதுமக்கள், இளைஞர்கள் நாங்கள் வேலை முடிந்து வந்ததும் எங்களை உற்சாகப்படுத்தி எங்களிடம் நன்கு பழகி வருகின்றனர்.

நாங்கள் தினமும் காலையில் வேலைக்கு சென்று அந்த பகுதிகளில் உணவுகளை சாப்பிட்டுவிட்டு இரவு தான் மண்டபத்திற்கு வருவோம். நேற்று இரவு வரும்பொழுது பொதுமக்கள் சிலர் மண்டபத்தின் வாசலில் நின்று வரவேற்றனர். பின்னர் சாப்பிட வாருங்கள் என அழைத்தனர். அங்கு சென்று பார்த்தால் தடபுடலான பிரியாணி விருந்து அளித்தனர். இதை பார்த்த எங்களுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது என்றார்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், எங்களது ஊரில் கஜா புயல் பாதித்த போது பல மின்கம்பங்கள் சாய்ந்தது. அதனால் 5 நாட்களுக்கு மேலாக மின்சாரம் இல்லை. இதனையடுத்து வெளி மாவட்டத்தில் இருந்து வந்த பணியாளர்கள் இரவு, பகலாக வேலை செய்து படிப்படியாக மின்சாரம் வழங்கினர்.

இதனையடுத்து அவர்களுக்கு ஒரு வேளையாவது நல்ல உணவு அளிக்க வேண்டும் என முடிவு செய்தோம். அதன்படி அவர்களிடம் சொல்லாமலேயே எல்லாம் தயார் செய்து இரவு அவர்கள் வந்தவுடன் மகிழ்ச்சி பொங்க பரிமாறினோம் என்றனர். #GajaCyclone
Tags:    

Similar News