செய்திகள்

ஜெயலலிதா ஜூஸ் குடிக்கும் வீடியோ காட்சி உண்மைதானா? - அப்பல்லோ ஊழியர் வாக்குமூலத்தால் குழப்பம்

Published On 2018-11-28 03:03 GMT   |   Update On 2018-11-28 03:03 GMT
அப்பல்லோ மருத்துவமனை ஊழியர் வாக்குமூலத்தால், ஜெயலலிதா ஜூஸ் குடிக்கும் வீடியோ காட்சி உண்மைதானா? என்ற புதிய குழப்பம் மீண்டும் உருவாகி உள்ளது. #JayalalithaaDeath #Jayalalithaa #ArumugasamyCommission
சென்னை:

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அப்பல்லோ மருத்துவமனையின் தொற்று நோய் தடுப்பு சிறப்பு மருத்துவர் ராமகோபாலகிருஷ்ணன், நரம்பியல் பிரிவு டெக்னீசியன் யுவஸ்ரீ, தீவிர சிகிச்சை பிரிவு டெக்னீசியன் பஞ்சாபிகேசன் ஆகியோர் நேற்று ஆணையத்தில் ஆஜராகினர்.



ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட நோய் தொற்றுக்கு 22.9.2016, 23.9.2016 ஆகிய தேதிகளில் அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர் ராமசுப்பிரமணியன் சிகிச்சை அளித்து வந்துள்ளார். 24.9.2016 முதல் 1.10.2016 வரை அவர் வெளிநாட்டில் இருந்த போது அவருக்கு பதிலாக மருத்துவர் ராமகோபாலகிருஷ்ணன் நோய் தொற்றுக்காக ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சையை மேற்பார்வையிட்டு ஆலோசனை வழங்கி உள்ளார்.

அவர் தனது வாக்குமூலத்தில், ‘15.11.2016 அன்று ஜெயலலிதாவுக்கு நோய் தொற்று முழுமையாக சரியாகி விட்டது’ என்று கூறி உள்ளார்.

நோய் தொற்றினால் இதயம் மற்றும் நுரையீரல் பாதிக்கப்பட்டு ஜெயலலிதா இறந்ததாக அப்பல்லோ மருத்துவமனை அளித்த இறப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் ஜெயலலிதாவுக்கு கடைசி வரை நோய் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், நோய் தொற்று தொடர்பாக மருத்துவர் ராமகோபாலகிருஷ்ணன் அளித்த வாக்குமூலம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக விரிவாக விசாரிக்க ஆணையம் முடிவு செய்துள்ளது.

ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த தீவிர சிகிச்சை பிரிவு அறையில் பஞ்சாபிகேசன் டெக்னீசியனாக பணியாற்றி உள்ளார். இதனால், ஜெயலலிதா இருந்த அறை குறித்து அவரிடம் ஆணையம் தரப்பு வக்கீல் எஸ்.பார்த்தசாரதி கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், ‘ஜெயலலிதா இருந்த அறையின் ஜன்னல் கண்ணாடி திரைச்சீலையால் மூடப்பட்டிருக்கும்’ என்று கூறி உள்ளார்.

இதுதொடர்பாக அப்பல்லோ தரப்பு வக்கீல்கள் அவரிடம் குறுக்கு விசாரணை செய்த போது, ‘திரைச்சீலை சில சமயங்களில் திறந்து விடப்படும். அப்போது அறைக்கு வெளியே மரங்கள் இருப்பது தெரியும்’ என்று பதில் அளித்துள்ளார்.

மேற்கண்ட தகவலை ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது ஜூஸ் குடிப்பது போன்ற வீடியோ அவரது மரணத்துக்கு பின்னர் வெளியானது. அதில், அவர் தங்கி இருந்த அறையின் ஜன்னல் கண்ணாடியில் திரைச்சீலை இருக்காது, அந்த கண்ணாடி வழியாக மரம் மற்றும் செடிகள் தெரியும்.

ஜெயலலிதா ஜூஸ் குடிப்பது போன்ற வீடியோ அவர் தங்கி இருந்த அறையில் எடுக்கப்பட்டது தானா? என்ற குழப்பம் ஏற்கனவே இருந்து வரும் நிலையில் டெக்னீசியன் பஞ்சாபிகேசனின் வாக்குமூலம் மீண்டும் புதிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.  #JayalalithaaDeath #Jayalalithaa #ArumugasamyCommission
Tags:    

Similar News