செய்திகள்

குமரியில் கடந்த 11 மாதத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தில் 63 பேர் கைது

Published On 2018-11-24 12:15 GMT   |   Update On 2018-11-24 12:15 GMT
குமரி மாவட்டத்தில் கடந்த 11 மாதத்தில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்த 63 பேர் மீது போலீசார் குண்டர் சட்டத்தில் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவர்களை கண்காணித்து அவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து மாவட்டம் முழுவதும் குற்றச்செயலில் ஈடுபடுபவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். மேலும் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்தவர்களை குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

இந்த நிலையில் நேற்று ஒரேநாளில் 3 பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். நாகர்கோவில் கோட்டார் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த கொலையில் தொடர்புடைய கீழசரக்கல்விளையை சேர்ந்த பிரதீப் (வயது 22). இளங்கடை பகுதியை சேர்ந்த மனோ என்ற உஷ்மான் (30), கோட்டார்கம்பளம் தெருவை சேர்ந்த ரமேஷ் (20) ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

மேலும் இதேபோன்று மற்றொரு கொலை முயற்சியிலும் அவர்கள் ஈடுபட்டனர். இதையத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடுமாறு கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் பரிந்துரை செய்தார். இதையடுத்து 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அவர்களை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளை ஜெயிலில் அடைத்தனர்.

கடந்த 11 மாதங்களில் குண்டர் தடுப்புச்சட்டத்தில் 63 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடதக்கது. #tamilnews
Tags:    

Similar News