செய்திகள்

புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பது அரசியலுக்காக அல்ல - தினகரன் விளக்கம்

Published On 2018-11-24 09:12 GMT   |   Update On 2018-11-24 09:12 GMT
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நாங்கள் சந்திப்பது அரசியல் செய்வதற்கு அல்ல ஆறுதலும், உதவிகளும் வழங்க மட்டுமே என்று டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார். #TTVDhinakaran #GajaCyclone
சென்னை:

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்க்கும்போது மாநில அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. காவல்துறை பாதுகாப்போடு பிரதான சாலைகளில் செல்லும் அமைச்சர்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை மட்டுமே சந்தித்து திரும்புகிறார்களே தவிர, நகர கிராமப்புற பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள மற்ற மக்களை சந்திப்பதில்லை என போகுமிடமெல்லாம் மக்கள் கூறுகின்றனர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் 30 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளதாக கூறுகின்றனர். ஆகவே சில நாட்களுக்கு மட்டுமே நிவாரணம் அளிப்பதைவிட மத்திய மாநில அரசுகள் சிறப்பு கவனம் செலுத்தி, அம்மக்களின் வாழ்வாதாரத்தை நிரந்தரமாக மீட்டெடுக்க வேண்டும்.

அமைச்சர்கள் ஆங்காங்கே ஆய்வு கூட்டங்கள் நடத்தி அதிகாரிகளை பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்ல விடாமல் தடுப்பதை தவிர்த்து அதிகாரிகளை சுதந்திரமாக கிராமங்களுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும்.

இதற்கு முன்பு புயல் பாதிப்புகள் ஏற்பட்டபோதெல்லாம் மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகைக்கு யானைப்பசிக்கு சோளப்பொறியை தந்ததை போல் மத்திய அரசு நிவாரணம் கொடுத்துள்ளது. இம்முறையாவது அவ்வாறு இல்லாமல் இடைக்கால நிவாரண நிதியாக குறைந்தபட்சம் 5 ஆயிரம் கோடியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்.

சோழநாடு சோறுடைத்து என்று சொல்வார்கள். ஆனால் செல்லும் இடங்களில் எல்லாம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் அநாதைகள் போலவும், அகதிகள் போலவும் உணவுக்காக வீதிகளில் நிற்பது வேதனையாக உள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நாங்கள் சந்திப்பது அரசியல் செய்வதற்கு அல்ல. ஆறுதலும், உதவிகளும் வழங்க மட்டுமே.

அ.ம.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் என்.ஜி.ஓ.க்கள் போல செயல்பட்டு வருகிறார்கள். அ.ம.மு.க. சார்பில் நிவாரண பொருட்கள் முகாம்களுக்கும் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கும், தொடர்ந்து அனுப்பப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.

தனியார் தொண்டு நிறுவனங்களும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்து வருவதை வரவேற்கிறேன். இந்த பணியில் அவர்களுக்கு இடையூறு ஏற் டாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அரசின் கடமை.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.  #TTVDhinakaran #GajaCyclone

Tags:    

Similar News