செய்திகள்

சுவாமிமலையில் ஏ.டி.எம்மில் பணம் எடுத்து கொடுப்பது போல் பெண்ணை ஏமாற்றி ரூ.10 ஆயிரம் திருட்டு

Published On 2018-11-24 09:09 GMT   |   Update On 2018-11-24 09:09 GMT
சுவாமிமலையில் ஏ.டி.எம்மில் பணம் எடுத்து கொடுப்பது போல் பெண்ணை ஏமாற்றி ரூ.10 ஆயிரம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுவாமிமலை:

பாபநாசம் தாலுக்கா திருவைக்காவூர் ஊராட்சி தேவனோடை களத்துமேட்டு தெருவை சேர்ந்தவர் காசிராஜன் மனைவி ஜோதி (வயது 42). இவர் இன்று காலை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு உறவினரை பார்த்துவிட்டு வந்தார்.

பின்னர் சுவாமிமலை சன்னதி தெருவில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கி அருகில் உள்ள ஏ.டி.எம்மில் பணம் எடுக்க சென்றார். அப்போது அங்கு நின்றிருந்த ஒரு வாலிபரிடம் தனது ஏ.டி.எம். கார்டை கொடுத்து ரூ.1500 பணம் எடுத்து தர கேட்டுக்கொண்டார்.

பின்னர் அதற்கு ரசீது வரவில்லை என்று ஜோதி கூறியதால் மீண்டும் அவரிடமிருந்து ஏ.டி.எம்.கார்டை வாங்கிய வாலிபர் ரசீதை எடுத்து கொடுப்பது போல் போக்குகாட்டி அவரது கணக்கில் இருந்து ரூ.10 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு அவசர அவசரமாக கார்டை கொடுத்துவிட்டு அவ்வழியே வந்த ஒருவரிடம் மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு ஏறி சென்று விட்டாராம்.

இதனால் சந்தேகம் அடைந்த ஜோதி சத்தம்போடவே அருகில் இருந்தவர்கள் வந்து விசாரித்த போது ஜோதியின் கணக்கில் இருந்து ரூ.10 ஆயிரத்தை வாலிபர் ஏமாற்றி எடுத்து சென்றது தெரியவந்தது.

இதுபற்றி ஜோதி சுவாமிமலை போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் ரேகா ராணி வழக்குப்பதிவு செய்து வங்கிஇன்றும் நாளையும் விடுமுறை என்பதால் திங்கட்கிழமை ஏ.டி.எம்.மில் உள்ள கேமிரா காட்சிகளை கைப்பற்றி தப்பி ஓடிய வாலிபர் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். பணத்தை பறிகொடுத்த ஜோதியின் கணக்கில் ரூ.15 ஆயிரம் மட்டும் இருந்தது. அதிலும் 10 ஆயிரம் பறிபோனதால் அவர் கதறி அழுதார்.

இந்த வங்கியின் ஏ.டி.எம்.மில் காவலாளி இல்லை. இதே ஏ.டி.எம்.மில் இதுபோல 3 முறை பணம் பறிப்பு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News