செய்திகள்

திருப்பத்தூர் அருகே கஜா புயலால் மின்சாரம் துண்டிப்பு - கிராம மக்கள் சாலை மறியல்

Published On 2018-11-21 05:03 GMT   |   Update On 2018-11-21 05:03 GMT
திருப்பத்தூர் அருகே கஜா புயலால் மின்சாரம் தடைபட்டது தொடர்பாக கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். #Gajastorm

திருப்பத்தூர்;

கஜா புயல் காரணமாக தமிழகத்தில் நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின.

புயல் எதிரொலியால் சிவகங்கை மாவட்டத்தில் அதிக மழை பதிவானது. மேலும் அங்கு பலத்த காற்று வீசியதால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து மின்கம்பங்கள் சேதமானது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள காரையூர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

கடந்த வாரம் கஜா புயல் தாக்கத்தின் காரணமாக இந்தப்பகுதியில் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் அந்தப்பகுதி முழுவதும் மின்சாரம் தடை பட்டது. இதனால் கிராம மக்கள் கடும் அவதியடைந்தனர்.

இது குறித்து திருப்பத்தூர் மின் வாரியத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து மின் ஊழியர்கள் காரையூர் பகுதியில் மின் கம்பங்களை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது காரையூர் கிராமத்தில் ஒரு பகுதிக்கு மட்டும் மீண்டும் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது. மற்றொரு பகுதி இருளில் மூழ்கியது.

இது தொடர்பாக பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதை கண்டித்து நேற்றிரவு காரையூர் பகுதி கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர்- சிங்கம்புணரி ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த தாசில்தார், திருப்பத்தூர் போலீஸ் டி.எஸ்.பி. மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மின்சாரம் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

போராட்டம் நடந்து முடிந்தபின் மின் வாரிய ஊழியர்கள் காரையூர் பகுதியில் மின்கம்பங்களை சீரமைத்தனர். இதைத் தொடர்ந்து மின் வினியோகம் செய்யப்பட்டது. #Gajastorm

Tags:    

Similar News