செய்திகள்

கலப்பு மணதம்பதி கொலையில் தமிழக அமைச்சருக்கு தொடர்பு - விடுதலை சிறுத்தைகள் புகார்

Published On 2018-11-18 06:10 GMT   |   Update On 2018-11-18 06:10 GMT
கலப்பு மணதம்பதி கொலையில் தமிழக அமைச்சருக்கு தொடர்பு உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி புகார் அளித்துள்ளது. #HonourKilling

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், நந்தீஷ்-சுவாதி ஆணவப்படுகொலைக்கு நியாயம் வழங்க வலியுறுத்தி நேற்று ராம்நகர் அண்ணாசிலையருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் ஜெய்பீம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு நிருபர்களிடம் கூறியதாவது:-

“விடுதலை சிறுத்தைகள் கட்சி. சாதி, ஆணவக் கொலையை வன்மையாக கண்டிக்கிறது. இந்த ஆணவக்கொலைக்கு பின்னால் கூலிப்படை உள்ளதா, அல்லது ஏதாவது கட்சி இருக்கிறதா என்று பொறுப்புணர்வுடன் விசாரிக்க வேண்டும். தமிழக காவல் துறை மீது நம்பிக்கை இல்லாததால், இந்த ஆணவப்படுகொலையை, சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட நந்தீஷ் குடும்பத்திற்கு, வன்கொடுமை சட்டத்தில் என்ன உதவி செய்ய முடியுமோ, அவை அனைத்தையும் செய்ய வேண்டும். அந்த குடும்பத்திற்கு தமிழக அரசு, 2 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அச்சுறுத்தல் உள்ளது. இந்த ஆணவ கொலை சம்பவத்தில் அமைச்சருக்கும் தொடர்பு உள்ளதாக தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்த வேண்டும்.

இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் பாதுகாப்பாக வெளியே உள்ளனர். அவர்களை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்து, வழக்கு முடியும் வரை, ஜாமீனில் வெளிவராதவாறு, சிறையில் வைத்திருக்க வேண்டும்’’.

இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார். #HonourKilling

Tags:    

Similar News