செய்திகள்

சேலம் மாவட்டத்தில் மழை- வீடு இடிந்து பெண் பலி

Published On 2018-11-17 05:17 GMT   |   Update On 2018-11-17 05:17 GMT
கஜா புயல் எதிரொலியாக சேலம் மாவட்டத்தில் மழை பரவலாக பெய்தது. அப்போது வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
சேலம்:

கஜா புயல் எதிரொலியாக சேலம் மாவட்டத்தில் நேற்று பரவலாக பெய்தது. இதில் தம்மம்பட்டி, வீரகனூர், ஆத்தூர் உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது.

இந்த மழையால் ஆத்தூர் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த மக்காசோழப்பயிர்கள் தரையில் சாய்ந்தது. மாவட்டத்தில் பல பகுதிகளில் பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த பொன்னாரம்பட்டியை சேர்ந்த சின்னப்பையன். இவரது மனைவி சந்திரா (வயது 42). இவர்களது மகள் சத்யா (29)வுக்கு திருமணம் ஆகி விட்டது. மகன் பி.இ.படித்து வருகிறார்.

சந்திரா நேற்றிரவு வீட்டருகே தென்னங்கீற்று முடையும் வேலையில் ஈடுபட்டு வந்தார். அப்போது அந்த பகுதியில் பெய்த சாரல் மழையால் வீட்டின் சுவர் இடிந்து சந்திராவின் மீது விழுந்தது. இதில் உடல் நசுங்கிய அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த சேலம் ஆர்.டி.ஒ.(பொறுப்பு) ஜெகநாதன் மற்றும் வருவாய் துறையினர் அந்த பகுதியில் விசாரணை நடத்தினர்.

சேலம் மாவட்டத்தில் அதிக பட்சமாக தம்மம்பட்டியில் 97 மி.மீ. மழை பெய்துள்ளது. வீரகனூர் 41, ஆத்தூர் 28, கெங்கவல்லி 27, ஆனைமடுவு 23, பெத்தநாயக்கன் பாளையம் 22, ஏற்காடு, கரிய கோவிலில் 20.2, சங்ககிரி 19, மேட்டூர் 14.6, காடையாம்பட்டி 12, ஓமலூர் 11, எடப்பாடி 8.6, சேலம் 6.9, வாழப்பாடி 2.5 மி.மீ. மழை என மாவட்டம் முழுவதும் 353 மி.மீ. மழை பெய்துள்ளது.
Tags:    

Similar News