செய்திகள்

ராஜபாளையத்தில் சரக்கு லாரி மரத்தில் மோதி வாலிபர் உடல் நசுங்கி பலி

Published On 2018-11-15 12:58 GMT   |   Update On 2018-11-15 12:58 GMT
ராஜபாளையத்தில் இன்று காலை சரக்கு லாரி மரத்தில் மோதி வாலிபர் உடல் நசுங்கி பலியானார்.

ராஜபாளையம்:

ராஜபாளையம் கூரை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது 25). இவர் பஞ்சு மார்க்கெட் பகுதியில் உள்ள தனியார் எண்ணை நிறுவனத்தில் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார்.

இன்று காலை லாரியில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு தென்காசிக்கு சரவணக்குமார் புறப்பட் டார்.

ராஜபாளையம்- தென்காசி ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது ஒரு மோட்டார் சைக்கிள் திடீரென குறுக்கே சென்றது.

இதன் மீது மோதாமல் இருப்பதற்காக சரவணக்குமார் லாரியை லேசாக திருப்பினார். ஆனாலும் கட்டுப்பாட்டை இழந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. தொடர்ந்து ரோட்டோர பனைமரம் மீது லாரி மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் சரவணக்குமார் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் படுகாயங்களுடன் ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஒரு மணிநேரம் போராடி லாரியில் சிக்கி இருந்த சரவணக்குமாரின் உடலை மீட்டனர்.

இதேபோல் ராஜபாளையம் எம்.ஆர்.நகரைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (44). தனியார் பஸ் கம்பெனியில் மெக்கானிக்காக பணியாற்றி வந்த இவர், சம்பவத்தன்று தனது மகன் மிதுல் தனஷ்கருடன் (11) மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார்.

சங்கரன்கோவில் ரோடு, இந்திரா நகர் விலக்கில் சென்றபோது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் பன்னீர்செல்வம் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டுச் சென்றது.

இதில் பன்னீர்செல்வம், மிதுல் தனஷ்கர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பன்னீர்செல்வம் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மிதுல் தனஷ்கர் ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து ராஜபாளையம் தெற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News