செய்திகள்

நெல்லை, தூத்துக்குடியில் பன்றி காய்ச்சலுக்கு ரெயில்வே ஊழியர்-மாணவன் பலி

Published On 2018-11-14 17:17 GMT   |   Update On 2018-11-14 17:30 GMT
நெல்லை மற்றும் தூத்துக்குடியில் பன்றி காய்ச்சலுக்கு 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் டெங்கு, பன்றி காய்ச்சல், மர்ம காய்ச்சலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கொசு ஒழிப்பு, சுகாதார பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே டெங்கு , பன்றி காய்ச்சல் காரணமாக இதுவரை 16 பேர் பலியானார்கள். இந்த நிலையில் பாளை சாந்திநகரை சேர்ந்த ஜான்வரதன்(48) என்பவர் மர்ம காய்ச்சலுக்கு பலியானார். இதனால் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு, பன்றிகாய்ச்சல் அறிகுறியுடன் 22 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் நெல்லையில் பன்றி காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலியானார். பாளை ரெயில்வே காலனியை சேர்ந்தவர் ஆறுமுகநயி னார்(வயது45). ரெயில்வே ஊழியர். கடந்த சில நாட்களாக இவருக்கு காய்ச்சல் இருந்தது. அவர் நெல்லையில் ஒரு தானியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அப்போது அவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும், சுகாதாரதுறை அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். ரெயில்வே காலனி பகுதியில் சுகாதார துறை அதிகாரிகள் முகாமிட்டு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் தூத்துக்குடியில் பள்ளி மாணவன் பன்றி காய்ச்சலுக்கு பலியானான். தூத்துக்குடி குறிஞ்சிநகரை சேர்ந்தவர் மந்திரமூர்த்தி. இவரது மகன் சக்தி கபிலன்(13), இவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் கடந்த 9-ந்தேதி சக்தி கபிலனுக்கு காய்ச்சல் ஏற்பட்டது.

அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தான். ரத்த பரிசோதனையில் அவனுக்கு பன்றி காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் இன்று சக்தி கபிலன் சிகிச்சை பலனின்றி இறந்தான். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

Similar News