செய்திகள்
சாமியார் சதுர்வேதி

தொழில் அதிபரின் மனைவி, மகளை கடத்தி கற்பழித்த வழக்கு - சாமியார் சதுர்வேதி தப்பி ஓட்டம்

Published On 2018-11-10 04:46 GMT   |   Update On 2018-11-10 04:46 GMT
சென்னை தொழில் அதிபரின் மனைவி-மகளை கடத்தி சென்று சிறை வைத்து கற்பழித்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சாமியார் சதுர்வேதியை கைது செய்ய தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். #Chaturvedi
சென்னை:

சாமியார் பிரேமானந்தா போல, சென்னையில் தொழில் அதிபரின் மனைவி- மகளையும் வீட்டில் சிறை வைத்து, பின்னர் ஆந்திராவுக்கு கடத்தி சென்று கற்பழித்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டவர் சாமியார் சதுர்வேதி.

இவர் சென்னை தியாகராயநகர் பசுல்லா சாலையில் ஸ்ரீராமானுஜர் மிஷன் டிரெஸ்ட் என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வந்தார். முதுகலை பட்டதாரியான இவர் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று தனது அறக்கட்டளை அலுவலகத்தில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்துவார். தன்னை கிருஷ்ணனின் அவதாரம் என்று கூறி வந்தார்.

அரிசியை வெண்பொங்கலாக மாற்றி காட்டி, பல்வேறு சித்து விளையாட்டுகளை இவர் செய்து வந்தார். இவருக்கு ஏராளமான பெண் பக்தர்கள் உண்டு.

சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் தொழில் ரீதியாக தனக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை தீர்த்து வைக்க சாமியார் சதுர்வேதியை நாடினார். தொழில்அதிபரின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாக கூறி அவரது வீட்டிற்கு சென்ற சாமியார் சதுர்வேதி பல்வேறு பூஜைகளை செய்தார்.

அப்போது தொழில் அதிபரின் மனைவியும், 16 வயது மகளும் சாமியாருக்கு பக்தர்கள் ஆனார்கள். பிரச்சினையை தீர்ப்பதாக கூறி தொழில் அதிபரின் வீட்டிற்குள் புகுந்த சாமியார் சதுர்வேதி, தொழில் அதிபரின் வீட்டின் கீழ்தளத்தை நாளடைவில் அபகரித்துக்கொண்டார்.

வீட்டை அபகரித்ததோடு நிற்காமல், தொழில் அதிபரின் மனைவியையும், மகளையும் தனக்கு வசியப்படுத்திக் கொண்டார். மேலும் அவர், தொழில் அதிபரின் மனைவியையும், மகளையும் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

தனது அறைக்குள்ளேயே அவர்கள் இருவரையும் அடைத்து வைத்து, விசேஷ பூஜை என்ற பெயரில் அவர்களை நிர்வாணப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதை தெரிந்துகொண்ட தொழில் அதிபர், சாமியார் சதுர்வேதியை தனது வீட்டை காலி செய்யுமாறு வற்புறுத்தினார். வீட்டை காலி செய்ய மறுத்த சாமியார் சதுர்வேதி தொழில்அதிபரின் மனைவியையும், மகளையும் ஆந்திர மாநிலத்திற்கு கடத்தி சென்றுவிட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த தொழில்அதிபர் தனது மனைவியையும், மகளையும் மீட்டுத்தரும்படி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தினார்கள்.

கற்பழிப்பு, கடத்தல், சிறை வைத்தல் மற்றும் பெண்கள் வன்கொடுமை பிரிவு உள்ளிட்ட 18 சட்டப்பிரிவுகளின் கீழ் சாமியார் சதுர்வேதி மீது 2004-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சாமியார் சதுர்வேதி கைது செய்யப்பட்டார். அவருடன் மேலும் 3 பேர் கைது ஆனார்கள். தொழில்அதிபரின் மனைவியையும், மகளையும் அபகரித்தது மட்டுமல்லாமல், அவர்களிடமிருந்து லட்சக்கணக்கான பணத்தையும் சதுர்வேதி பறித்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. சாமியார் சதுர்வேதியிடம் இருந்து தொழில்அதிபரின் மனைவியும், மகளும் மீட்கப்பட்டனர்.

இந்த வழக்கில் சாமியார் சதுர்வேதி மீதும், அவருடன் கைதானவர்கள் மீதும் சென்னை மகளிர் கோர்ட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணை நடந்து வந்தது.

ஆனால் ஜாமீனில் வெளிவந்த சாமியார் சதுர்வேதி வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்டார். அவரை கைது செய்ய கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. ஆனால் போலீசாரால் சாமியார் சதுர்வேதி எங்கு இருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தநிலையில் மகளிர் கோர்ட்டு சாமியார் சதுர்வேதியை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அவரை கடந்த அக்டோபர் 9-ந் தேதிக்குள் கோர்ட்டில் ஆஜராக உத்தரவிட்டது. அந்த காலக்கெடுவும் முடிந்துவிட்டது.

சாமியார் சதுர்வேதி வழக்கு விசாரணையை சந்திக்காமல் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரை தேடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வெளி மாநிலங்களுக்கும் சென்று வந்தனர். தற்போது அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

அவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிடாமல் இருக்க விமான நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டு உள்ளது. அவரை பற்றி தகவல் அறிந்தவர்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  #Chaturvedi
Tags:    

Similar News