செய்திகள்

ரன்வீர்ஷா அலுவலகத்தில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் சோதனை

Published On 2018-11-04 06:33 GMT   |   Update On 2018-11-04 07:42 GMT
தொழிலதிபர் ரன்வீர் ஷாவுக்கு சொந்தமான ஆடை ஏற்றுமதி அலுவலகத்தில் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். #RanvirShah
சென்னை:

சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் கொடுத்த தகவலின் பேரில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தொழில் அதிபர் ரன்வீர்ஷா வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அவரது தோழியும் பெண் தொழில் அதிபருமான கிரண்ராவ் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது ஏராளமான சாமி சிலைகள், பழமையான தூண்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஏற்கனவே கைதான தொழில் அதிபர் தீனதயாளனிடம் இருந்து ரன்வீர்ஷா சிலைகளை வாங்கி பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கோர்ட்டு அனுமதி பெற்று அதற்கான ஆதாரத்தை காட்டி ரன்வீர்ஷா வீட்டிலும், கிரண்ராவ் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

சென்னை அருகே ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான 2 பண்ணை வீடுகள் உள்ளன. அங்கும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது ரன்வீர்ஷா அங்கு சிலைகளை பதுக்கி இருந்தது தெரிய வந்தது. அந்த சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சிலைகள் பறிமுதல் செய்யப்பட்ட தகவலை கும்பகோணம் கோர்ட்டிலும் போலீசார் தெரிவித்தார்கள். மொத்தம் 244 சிலைகள் மற்றும் கல் தூண்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவை அனைத்தும் கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தொழில் அதிபர்கள் ரன்வீர்ஷாவும், கிரண்ராவும் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். ஆனால் அவர்களுக்கு முன் ஜாமீன் கிடைக்கவில்லை.

இதையடுத்து அவர்கள் இருவரும் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விடக்கூடாது என்பதற்காக விமான நிலையத்தில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாகவே ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வந்தனர். ஆனால் கடந்த 2 வாரமாக எந்தவித சோதனையிலும் ஈடுபடாமல் இருந்தனர். எனவே ரன்வீர்ஷா வீட்டில் நடந்த சோதனை நிறைவடைந்ததாக கருதப்பட்டது.

இந்த நிலையில் இன்று கிண்டி ரேஸ் கோர்ஸ் அருகில் உள்ள ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான பி.எஸ். அப்பேரல்ஸ் எனப்படும் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல், டி.எஸ்.பி. சுந்தரம் மற்றும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின் போது சாமி சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் நந்தி, கருடன் உள்ளிட்ட 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஏற்கனவே தங்களிடம் உள்ள சிலைகளுக்கு ஆவணங்கள் இருப்பதாக ரன்வீர்ஷா தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கு போலீசார் கூறுகையில், “மிகவும் தொன்மையான மற்றும் பழமையான சிலைகளை வாங்கி வைத்திருப்பது குற்றம். அதை விற்பனை செய்வதும் குற்றம் என்று தெரிவித்து இருந்தனர்.

எனவே பழமையான சிலைகள் யார்-யாரிடம் வாங்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிய இன்று சோதனை நடந்ததாக கூறப்படுகிறது. அதில் அது தொடர்பான ஆவணங்கள் சிக்குமா? என்ற கோணத்திலும் சோதனை நடந்தது.

இந்த சோதனையின் போது சாமி வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


இன்று நடந்த சோதனை தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. சுந்தரம் கூறியதாவது:-

சிலை கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக ரன்வீர்ஷா, கிரண்ராவ் உள்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்

இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக ரன்வீர்ஷா தரப்பு வக்கீல் தங்கராசு கூறுகையில், “தேர் பவனி வாகனங்களுக்கு உரிய ஆவணங்கள் எங்களிடம் உள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட தேர் பவனி வாகனங்கள் தொன்மையானது அல்ல என்றார். #RanvirShah

Tags:    

Similar News