செய்திகள்

ஆதரவற்ற மாணவ-மாணவியருடன் தீபாவளி கொண்டாடிய தமிழக கவர்னர்

Published On 2018-11-03 15:33 GMT   |   Update On 2018-11-03 15:33 GMT
சென்னை ராஜ்பவன் வரலாற்றில் முதன்முறையாக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று ஆதரவற்ற பள்ளி மாணவ-மாணவியருடன் அங்கு தீபாவளி கொண்டாடினார். #TNGovernor #Diwali #RajBhavan #RajBhavanDiwali
சென்னை:

தமிழ்நாடு கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் முதல் முறையாக இன்று சென்னையில் உள்ள 12 ஆதரவற்ற பள்ளிகளை சார்ந்த 517 மாணவ, மாணவிகளுடன் சேர்ந்து இன்று தீபாவளியை கொண்டாடினர்.

இதற்காக 12 பள்ளிகளிலிருந்து 517 மாணவ, மாணவிகள் கவர்னர் மாளிகைக்கு பேருந்துகள் மற்றும் வாகனங்கள் மூலம் அழைத்துவரப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் கவர்னர் மாளிகையில் உள்ள குடியரசுத் தலைவர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தங்கும் இடம், பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் தர்பார் அரங்கம், மான்கள் சுற்றித் திரியும் பரந்த புல்வெளி, வனப்பகுதி மற்றும் போலோ விளையாட்டு மைதானம் ஆகியவற்றை பார்வையிட்டனர்.

இங்குள்ள புல்வெளியில் சுற்றித்திரியும் பல வகைகளான மான்களையும் கண்டு மகிழ்ச்சியுற்றனர். மேலும், மாணவ-மாணவியர் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இந்த ஆண்டு தீபாவளி கொண்டாடிடும் வகையில் அங்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்ப்பட்டிருந்தன.

குடைராட்டினம், சிறிய ராட்டினம், மினி ஜெயின்ட் ராட்டினம் ஆகியவற்றில் மாணவ மாணவிகள் விளையாடி மகிழ்ந்தனர். பின்னர் நான்கு இடங்களில் அமைக்கப்பட்ட துப்பாக்கி மூலம் பலூன் சுடும் விளையாட்டிலும் ஈடுபட்டு மகிழ்ந்தனர்.



பிறகு அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. இதனைதொடர்ந்து, தர்பார் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் அங்கு வந்திருந்த 517 மாணவ-மாணவிகளுக்கும் ஸ்வீட் பாக்ஸ் மற்றும் கணக்கிடும் கருவியை (Calculator) பரிசாக வழங்கி தனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார் என கவர்னர் மாளிகை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TNGovernor #Diwali #RajBhavan #RajBhavanDiwali
Tags:    

Similar News