செய்திகள்

தீபாவளி மாமூல் வசூல்- போலீஸ் நிலையத்தில் அதிரடி சோதனை

Published On 2018-11-03 09:01 GMT   |   Update On 2018-11-03 09:01 GMT
தீபாவளி பண்டிகையையொட்டி மாமூல் வசூல் செய்த போலீஸ் நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது பட்டாசுகள், புதிய துணிமணிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. #Diwali #Vigilancepolice

விழுப்புரம்:

தமிழக அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகள் தீபாவளி பண்டிகையையொட்டி மாமூல் வசூலில் ஈடுபடுவதாக வந்த புகாரை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கடந்த 1-ந்தேதி சென்னை உள்பட 24 இடங்களில் நடந்த சோதனைகளில் ரூ.44 லட்சம் சிக்கியது. நேற்றும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரின் அதிரடி சோதனை நீடித்தது.

உளுந்தூர்பேட்டையை அடுத்த திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் நேற்று இரவு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை செய்தனர்.

அப்போது போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபோஸ் மற்றும் போலீஸ்காரர்கள் பணியில் இருந்தனர். சோதனையில் கட்டுக்கட்டாக கணக்கில் வராத 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபோஸ் தங்கி இருந்த வீட்டுக்கும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சென்று ஆய்வு செய்தனர்.

அங்கு குவியல் குவியலாக பட்டாசு பாக்ஸ் மற்றும் புதிய துணிமணிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 120 பட்டாசு பெட்டிகள் இருந்தன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். அவற்றை பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் திருநாவலூர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். போலீஸ் நிலையத்தில் இருந்த போலீசாரிடம் விசாரணை நடத்தினார்.


அதனை தொடர்ந்து திருநாவலூர் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபோசை விழுப்புரம் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.

லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரின் இந்த நடவடிக்கையை வரவேற்று திருநாவலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்கள் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

தேனி மாவட்டம் பழனி செட்டிபட்டியில் உள்ள மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேற்று இரவு சோதனை செய்தனர்.

சோதனையின்போது அலுவலகத்தின் நாற்காலிகளுக்கு கீழ் மறைத்து வைக்கப்பட்டு இருந்த ரூ.80,200 பணத்தை போலீசார் கைப்பற்றினர். இந்த பணம் கணக்கில் காட்டப்படாத பணம் என்று தெரியவந்தது.

விசாரணை நடந்து கொண்டு இருந்த போது அலுவலக மஸ்தூர் பணியாளர் வெளியே சென்றார். அவரை மீண்டும் அழைத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை செய்தனர். #Diwali #Vigilancepolice

Tags:    

Similar News