செய்திகள் (Tamil News)

கோட்டக்குப்பம் அருகே 17 வயது சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்

Published On 2018-11-01 10:46 GMT   |   Update On 2018-11-01 10:46 GMT
கோட்டக்குப்பம் அருகே 17 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

சேதராப்பட்டு:

கோட்டக்குப்பத்தை அடுத்த கூனிமேடு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் விமலன். (வயது 28). சென்னையில் லேத் பட்டறையில் வேலை பார்த்து வரும் இவருக்கும், கடலூர் மாவட்டம் பரங்கிப் பேட்டை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் திருமணம் செய்து வைக்க இரு வீட்டாரும் முடிவு செய்தனர்.

இவர்களது திருமணம் நேற்று கூனிமேடு அருகே வில்வநத்தம் கிராமத்தில் உள்ள கோவிலில் வைத்து நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இவர்கள் மணமக்களின் இருவீட்டாரும் அங்கு குழுமி இருந்தனர்.

இந்த நிலையில் 17 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க உள்ள தகவல் கோட்டக்குப்பம் மகளிர் போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து கோட்டக்குப்பம் மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கவிதா, முத்துலட்சுமி, மரக்காணம் தாசில்தார் தனலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை அறிந்ததும் மணமகன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் இரு வீட்டினரும் வாக்கு வாதம் செய்தனர்.

17 வயதில் பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம் என்பதை போலீசார் எடுத்து கூறினர். இதனை இருவீட்டாரும் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது.

Tags:    

Similar News