செய்திகள்

ஆவடியில் மர்ம காய்ச்சலுக்கு போலீஸ்காரர் உயிரிழப்பு

Published On 2018-10-31 08:02 GMT   |   Update On 2018-10-31 08:02 GMT
ஆவடியில் மர்ம காய்ச்சலுக்கு போலீஸ்காரர் பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #MysteryFever #Death
போரூர்:

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தினந்தோறும் உயிர்பலி ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.



டெங்கு-பன்றி காய்ச்சலை தடுக்கும் பணியினை சுகாதார துறையினர் செயல்படுத்தி வருகின்றனர். விழிப்புணர்வு பிரசாரமும் செய்யப்பட்டு வருகிறது. மாதவரம் பகுதியில் கடந்த வாரம் டெங்கு காய்ச்சலுக்கு இரட்டை குழந்தைகள் பலியாகினர்.

இதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. காய்ச்சல் அறிகுறி ஏற்பட்ட உடனேயே அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் மர்ம காய்ச்சலுக்கு திருமணமான 6 மாதத்தில் போலீஸ்காரர் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆவடி சாந்தி நகரைச் சேர்ந்தவர் விஜய் (வயது26). ஆவடி 13-வது பட்டாலியனில் சிறப்பு காவலராக பணியாற்றி வந்தார்.

கடந்த சில நாட்களாக விஜய்க்கு காய்ச்சல் இருந்தது. அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் காய்ச்சலின் தாக்கம் குறையவில்லை. இதையடுத்து கடந்த 26-ந்தேதி போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் விஜய்யை சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி போலீஸ்காரர் விஜய் பரிதாபமாக இறந்தார்.

பலியான விஜய்க்கு கடந்த 6 மாதத்துக்கு முன்புதான் திருமணம் முடிந்தது. அவருக்கு நர்மதா என்ற மனைவி உள்ளார். மர்ம காய்ச்சலுக்கு போலீஸ்காரர் விஜய் பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விஜய்க்கு வந்திருந்த காய்ச்சல் குறித்து டாக்டர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து போரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #MysteryFever #Death

Tags:    

Similar News