செய்திகள்

அயனாவரம் சிறுமிக்கு பாலியல் கொடுமை: சிபிஐ விசாரணை கேட்டு கைதானவர்கள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

Published On 2018-10-31 07:45 GMT   |   Update On 2018-10-31 07:45 GMT
அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கேட்டு கைதானவர்கள் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #Chennaigirlharassment
சென்னை:

சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமி பலரால் பாலியல் கொடுமைக்கு உள்ளானார்.

அந்த அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாகவும், லிப்ட் ஆப்ரேட்டர்களாகவும் வேலை பார்த்தவர்கள் உள்பட 17 பேர் அந்த சிறுமியை கடந்த 6 மாதங்களாக பாலியல் கொடுமை செய்துள்ளனர். இதனால் அந்த சிறுமி சோர்ந்து போன நிலையில் காணப்பட்டாள். அந்த சிறுமியிடம், அவளது அக்காள் விசாரித்தபோது தான் இந்த கொடூரம் வெளி வந்தது.

இதுகுறித்து அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 17 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை மகளிர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் குற்றப்பத்திரிகையின் நகல் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கிடையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிலர், இந்த வழக்கை அயனாவரம் போலீசார் விசாரிப்பது நியாயமாக இருக்காது.


அதனால், சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கையுடன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா விசாரித்தார். அப்போது போலீஸ் தரப்பில் சிறப்பு வக்கீல் என்.ரமேஷ் ஆஜாராகி, தமிழக போலீசார் இந்த வழக்கை நியாயமாகவும் சட்டப்படியாகவும் விசாரித்து வருகின்றனர்.

அந்த விசாரணையில் உள்நோக்கம் உள்ளது என்றோ, தன்னை வேண்டுமென்றே போலீசார் உள்நோக்கத்துடன், தனிப்பட்ட பகையுடன் கைது செய்து விட்டனர் என்றோ மனுதாரர்கள் கூறவில்லை.

இந்த வழக்கின் விசாரணை விவர ஆவணத்தை (கேஸ் டைரியை) இந்த கோர்ட்டு ஆய்வு செய்யலாம்’ என்று வாதிட்டார். இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா உத்தரவிட்டார்.

இந்தநிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று நீதிபதி பிறப்பித்தார். அதில் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்பதற்கு சரியான காரணங்களை மனுதாரர்கள் கூறவில்லை. அதனால் வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என்று உத்தரவிட்டார். #Chennaigirlharassment
Tags:    

Similar News