செய்திகள்

காசிமேட்டில் துப்பாக்கி முனையில் ரவுடி கைது

Published On 2018-10-30 10:58 GMT   |   Update On 2018-10-30 11:03 GMT
வீட்டில் பதுங்கி இருந்த ரவுடியை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

ராயபுரம்:

காசிமேடு காசிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி தேசப்பன். இவர் குண்டர் சட்டத்தில் 13 முறை ஜெயிலுக்கு சென்றவர்.

ஜெயிலில் இருந்து வெளியே வந்த தேசப்பன், பின்னர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. போலீஸ் நிலையத்திற்கும் செல்ல வில்லை. கடந்த ஒரு வருடமாக தலைமறைவாக இருந்த இவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில், ரவுடி தேசப்பன் காசிமேட்டில் உள்ள ஒரு வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ராயபுரம் போலீஸ் உதவி கமி‌ஷனர் கண்ணப்பன் உத்தரவுப்படி ரவுடி தேசப்பனை பிடிக்க போலீசார் திட்டமிட்டனர்.

காசிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ராஜ் தலைமையில் துப்பாக்கியுடன் சென்ற போலீசார், தேசப்பன் தங்கி இருந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அங்கு தேசப்பனுடன் அவருடைய கூட்டாளிகள் 4 பேரும் இருந்தனர்.

இதில் தேசப்பன், அவரது கூட்டாளிகள் கவுதம், வேலு மணி, சக்திவேல் ஆகியோரை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். விக்னேஷ் என்பவர் தப்பி ஓடிவிட்டார்.

கைதான பிரபல ரவுடி தேசப்பன் 13 முறை குண்டர் சட்டத்தில் கைதாகி ஜெயிலுக்கு சென்றவர். இவர் மீது 2 கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்குகள் உள்பட பல வழக்குகள் உள்ளன.

கைதான 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஏற்கனவே, நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டது விசாரணையில் தெரிய வந்தது. தப்பி ஓடிய விக்னேஷ் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News