செய்திகள்

25 ஆயிரம் மாணவர்களுக்கு ஆடிட்டர் படிப்புக்கு பயிற்சி - அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2018-10-28 04:59 GMT   |   Update On 2018-10-28 04:59 GMT
தமிழகத்தில் சிறந்த ஆடிட்டர்களை உருவாக்க பிளஸ் 2 முடித்தவுடன் ஆடிட்டர் படிப்பிற்கு 25 ஆயிரம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #MinisterSengottaiyan
கோபி:

கோபியில் கீரிப்பள்ள ஓடை, ஈரோடை அமைப்பு சார்பில் தூர்வாரப்பட உள்ளது. இன்று காலை தொடங்கிய இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார்.

அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு பணியைத் துவக்கி வைத்தார்.

தொடர்ந்து நிருபர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோரின் தலைமையில் இந்த அரசு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் 2.85 லட்சம் ஆடிட்டர்கள் தான் உள்ளனர். தமிழகத்தில் சிறந்த ஆடிட்டர்களை உருவாக்க பிளஸ் 2 முடித்தவுடன் மாணவர்களுக்கு ஆடிட்டர் படிப்பிற்கு தமிழகத்தில் முதற்கட்டமாக 25 ஆயிரம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

பின்னர், அவர்களுக்கு சிறந்த ஆடிட்டர்களைக் கொண்டு முதன்மைத் தேர்வு எழுத பயிற்சியளிக்கப்படும்.



தமிழகத்தில் 52 ஆயிரம் குழந்தைகளுக்கு எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் அரசு பள்ளிகளில் துவக்கப்பட உள்ளன. இதற்கு தாய்மொழிதான் முன்னுரிமை அளிக்கப்படும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஆங்கில் வழியில் படிக்க வைக்க வேண்டும் என விரும்பினால் ஆங்கில வழி கல்வியும் கற்றுத் தரப்படும். அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் வழியில் செயல்படும் இந்த அரசு இருமொழி கொள்கையைப் பின்பற்றும்.

பள்ளிகளில் மாணவிகள் பாலியில் தொந்தரவுக்கு ஆளானால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பழைய வரலாறு மாறாத வகையில் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும். கோபியை குப்பையில்லாத நகரமாக மாற்ற ரூ.3 கோடியே 86 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

குடிநீர் திட்டப் பணிகளுக்காக ரூ.51 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.52 லட்சம் மதிப்பீட்டில் கீரிப்பள்ள ஓடையை கான்கிரீட் தளமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #MinisterSengottaiyan

Tags:    

Similar News