செய்திகள்

திருச்சியில் நிதி நிறுவன ஊழியர்களிடம் ரூ.1கோடி பணத்தை பறித்து சென்ற கும்பல்

Published On 2018-10-27 08:15 GMT   |   Update On 2018-10-27 08:15 GMT
திருச்சியில் இன்று நிதி நிறுவன ஊழியர்களிடம் ரூ.1 கோடி பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #TrichyRobbery
திருச்சி:

திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே இன்று மதியம் தனியார் நிதி நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த ஒரு மர்மகும்பல், திடீரென 2பேரையும் கீழே தள்ளி விட்டு அவர்கள் வைத்திருந்த சூட்கேசை பறித்து கொண்டு காரில் தப்பினர். சூட்கேசில் நிதி நிறுவன பணம் ரூ.1கோடி இருந்தது. ஆட்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து உடனடியாக நிதி நிறுவன ஊழியர்கள், திருச்சி மாநகர போலீஸ் கமி‌ஷனர் அமல்ராஜ்க்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர், கொள்ளை கும்பலை பிடிக்க போலீசாருக்கு அதிரடி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து திருச்சி மாநகரம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். மாநகரை சுற்றி 9 செக்போஸ்ட்கள் உள்ளது. அந்த வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பிறகே அனுப்பப்பட்டன.

மேலும் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் திருச்சி எல்லையை தாண்டுவதற்குள் பிடித்து விடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கொள்ளையில் ஈடுபட்டுள்ள மர்மநபர்கள், நிதிநிறுவன ஊழியர்கள் சூட்கேசில் பணம் கொண்டு வருவதை நோட்டமிட்டு இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் திருச்சியில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #TrichyRobbery
Tags:    

Similar News