செய்திகள்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களுடன் மதுரையில் தினகரன் ஆலோசனை

Published On 2018-10-26 07:50 GMT   |   Update On 2018-10-26 07:50 GMT
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் டி.டி.வி. தினகரன் மதுரையில் ஆலோசனை நடத்தினார். #TTVDhinakaran #DisqualificationMLAs
மதுரை:

அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

இந்த நிலையில் பதவி நீக்கத்துக்குள்ளான எம்.எல்.ஏ.க்கள் குற்றாலத்தில் இருந்து நேற்று இரவு மதுரை வந்தனர். மாட்டுத்தாவணி, ரிங்ரோட்டில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த அவர்களை, அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் சந்தித்து பேசினார்.

சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதா? அல்லது இடைத்தேர்தலை சந்திப்பதா? என்பது குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, ‘மீண்டும் மேல்முறையீட்டுக்கு சென்றால் அதில் தீர்ப்பு வர தாமதமாகும். அது எடப்பாடி- ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு சாதகமாகவே இருக்கும்.

அதனால் மேல்முறையீடு செய்யாமல் இடைத்தேர்தலை சந்திக்கலாம்’ என்று ஒரு தரப்பினர் ஆலோசனை தெரிவித்தனர்.

மற்றொரு தரப்பினரோ இடைத்தேர்தலை சந்தித்தால் பெரும் செலவு செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்ததாக தெரிகிறது.

அவர்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கேட்டுக் கொண்ட தினகரன் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு, சசிகலாவை சந்தித்து விட்டு அவர் என்ன சொல்கிறார்? என்பதை கேட்டு ஒரு முடிவுக்கு வரலாம் என்று கூறியதாக தெரிகிறது.

முன்னதாக டி.டி.வி. தினகரன், நிருபர்களிடம் கூறியதாவது:-


தகுதி நீக்க தீர்ப்பு வழக்கில் முடிவெடுக்க பொதுச்செயலாளர் சசிகலா எனக்கு அதிகாரம் வழங்கியுள்ளார். அவரிடம் ஏற்கனவே இது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது.

எம்.ஜி.ஆர். ஆரம்பித்த அ.தி.மு.க.வை காப்பாற்றவே 18 எம்.எல்.ஏ.க்களும் தங்களது பதவியை தியாகம் செய்துள்ளனர்.

அ.தி.மு.க.வை எங்களால் தான் பாதுகாக்க முடியும். என்னுடைய ஆதரவாளர்கள் தெரிவித்தால் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வோம். அதே நேரத்தில் இடைத்தேர்தலை சந்திக்கவும் தயாராக உள்ளோம்.

தமிழகத்தில் 20 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வந்தால் அதை எதிர்கொண்டு வெற்றி பெறுவோம்.

அ.தி.மு.க.வினர் இந்த ஆட்சி நீடிக்கும் என்று நினைக்கிறார்கள். அதை எப்படி கையாளுவது? கீழே இழுப்பது என்பது எனக்கு எல்லா வேலைகளும் தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #DisqualificationMLAs
Tags:    

Similar News