செய்திகள்

புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட 1200 மதுபாட்டில்கள் பறிமுதல்- வாலிபர் கைது

Published On 2018-10-25 11:21 GMT   |   Update On 2018-10-25 11:21 GMT
சீர்காழி சாலையில் புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட 1200 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக வாலிபர் கைதானார்.
தரங்கம்பாடி:

புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை கடத்தி விற்பனை செய்யப்படுவதாக நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் மதுவிலக்கு தனிப்படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மதுவிலக்கு தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் சீர்காழி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசாரை கண்டதும் காரைக்காலில் இருந்து சீர்காழி நோக்கி சென்ற ஒரு கார் நிற்காமல் வேகமாக சென்றது. உடனே போலீசார் அந்த காரை துரத்தி சென்று செம்பனார்கோவில் அருகே அன்னப்பன்பேட்டை பகுதியில் மடக்கி பிடித்தனர். அப்போது காரில் இருந்த 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். ஆனால் கார் டிரைவர் போலீசாரிடம் சிக்கினார். பின்னர் காரை சோதனையிட்டபோது அதில் 1,200-க்கும் மேற்பட்ட புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.48 ஆயிரம் என கூறப்படுகிறது.

இதனையடுத்து மதுவிலக்கு போலீசார், பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள், கார் மற்றும் பிடிபட்ட கார் டிரைவரை செம்பனார்கோவில் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் கார் டிரைவர் காரைக்காலை சேர்ந்த வினோத்குமார் (வயது 29), காரில் இருந்தவர்கள் காரைக்காலை சேர்ந்த கார்த்திக்ராஜ், சீர்காழியை சேர்ந்த சரவணன் என்பதும், காரின் உரிமையாளர் கார்த்திக்ராஜ் என்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் வினோத்குமாரை கைது செய்தனர். தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News