செய்திகள்

காஞ்சீபுரம் பட்டாசுகள் வெடித்து விபத்து - 2 பெண்கள் உள்பட 4 பேர் பலி - வெடிகள் வாங்கி வைத்திருந்தவர் கைது

Published On 2018-10-23 20:33 GMT   |   Update On 2018-10-23 20:33 GMT
தீபாவளி விற்பனைக்காக வீட்டில் வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து 2 பெண்கள் உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர். அனுமதி இல்லாமல் நாட்டு வெடிகள் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார். #Kanchipuram #Diwali
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் நாகலூத்துமேட்டில் வசித்து வருபவர் மத்தின்பாய் (வயது 52). இவரது மனைவி தாஹிராபானு (45), மகன் முஸ்தாக் (22). தீபாவளி பண்டிகையையொட்டி மத்தின்பாய் வேலூர் மாவட்டம் நெமிலியில் இருந்து ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் மொத்த விலைக்கு பட்டாசுகளை வாங்கிவந்தார். அவைகளை சில்லரை விற்பனைக்காக வீட்டில் உள்ள ஒரு அறையில் வைத்திருந்தார்.

அவை அனைத்தும் அனுமதி இல்லாமல் தயாரிக்கப்படும் நாட்டு வெடி வகையை சேர்ந்த பட்டாசுகள் என கூறப்படுகிறது. தாஹிராபானுவும், அவரது மகன் முஸ்தாக்கும் நேற்று மதியம் அந்த பட்டாசுகளை சில்லரை விற்பனைக்கு ஏற்றவகையில் பிரித்து சிறிய பாக்கெட்டுகளாக அடைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது 3 மணியளவில் திடீரென அந்த பட்டாசுகள் தீப்பிடித்துக் கொண்டன. இதனால் அடுத்தடுத்து பலத்த சத்தத்துடன் பட்டாசுகள் சரமாரியாக வெடித்து நாலாபுறமும் சிதறின. சுமார் 15 நிமிடங்களுக்கு அந்த பட்டாசுகள் வெடித்தன. இதில் தாஹிராபானு, முஸ்தாக் ஆகியோர் மீது தீப்பற்றி உடல் கருகியது. சிறிது நேரத்திலேயே அவர்கள் பரிதாபமாக இறந்தனர்.

இந்த வெடி விபத்தில் அருகில் வசிக்கும் மஸ்தான் (47) என்பவரின் வீட்டு சுவரும் இடிந்துவிழுந்தது. இதில் மஸ்தான் இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். அந்த வீட்டின் வெளியே உட்கார்ந்து இருந்த அவரது தாய் சர்புதீன்பீபி (75) படுகாயம் அடைந்தார். பின்னர் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவரும் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். அடுத்தடுத்த 2 வீடுகளிலும் தாய்-மகன் பலியாகியுள்ளனர்.

பயங்கர வெடி சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இதுபற்றி தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். மாவட்ட தீயணைப்பு அதிகாரி இளங்கோ தலைமையில் தீயணைப்பு வீரர்கள் 2 வண்டிகளில் விரைந்து வந்தனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி தீயை அணைத்து கட்டுப்படுத்தினர்.

இந்த வெடி விபத்தில் மத்தின்பாய் வீடும், மஸ்தான் வீடும் பெருத்த சேதமடைந்தன. மேலும் எதிர்வீட்டில் உள்ள ஜன்னல்களும் நொறுங்கின.

காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு எம்.பாலசுப்பிரமணியன், சின்ன காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். போலீசார் சம்பவ இடத்தில் இறந்த 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு விற்பனை செய்வதற்கான லைசென்ஸ் அவர்களிடம் உள்ளதா? வெடி விபத்துக்கு காரணம் என்ன? என்பது குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு எம்.பாலசுப்பிரமணியன் விசாரணை நடத்தினார். விசாரணையில் அனுமதி இல்லாமல் நாட்டு வெடிகளை வாங்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மத்தின்பாயை போலீசார் கைது செய்தனர்.

நாட்டு வெடி வகை பட்டாசு என்பதால் உராய்வு காரணமாக தீப்பற்றி இருக்கலாம் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். ஆனாலும் தீப்பிடித்ததற்கு வேறு காரணம் ஏதும் உள்ளதா? என்பது பற்றி தீயணைப்பு வீரர்களும் விசாரணை நடத்துகிறார்கள்.

இந்த கோர சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் அமைச்சர் பா.பென்ஜமின், மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி என்.சுந்தரமூர்த்தி, தாசில்தார் காஞ்சனமாலா, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், கே.மரகதம்குமரவேல் எம்.பி., மாவட்ட பிரதிநிதி ஆர்.வி.ரஞ்சித்குமார் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

காஞ்சீபுரத்தில் பட்டபகலில் நடந்த இந்த பயங்கர வெடி விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
Tags:    

Similar News