செய்திகள்

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 4-வது உலைக்கு தேவையான சாதனங்களை ரஷியா அனுப்பியது

Published On 2018-10-20 22:26 GMT   |   Update On 2018-10-20 22:26 GMT
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 4-வது உலைக்கு தேவையான மேலும் 2 சாதனங்களை ரஷியா அனுப்பியது. #KudankulamNuclearPowerPlant #Russia
சென்னை:

அணுசக்தி துறையில் செயல்படும் ரஷிய நாட்டின் அரசு நிறுவனமான ‘ரொஸாட்டம்’, தனது துணை நிறுவனமான ‘ஆட்டமனர்ஜோமாஷ்’ பெயரில் அணுமின் நிலைய உலைக்கு தேவையான சாதனங்களை உற்பத்தி செய்து வருகிறது.

அந்த நிறுவனம் தமிழகத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் உற்பத்தி நிலையத்தின் 4-வது உலைக்கு தேவையான முக்கிய சாதனங்களை அனுப்பி இருக்கிறது.

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு மொத்தமாக இதுபோன்று 4 சாதனங்கள் தேவைப்படுகிறது. அதில் ஏற்கனவே 2 சாதனங்கள் வந்துள்ள நிலையில், தற்போது புதிதாக 2 சாதனங்கள் மட்டும் வாங்கப்பட்டு இருக்கின்றன.

இந்த சாதனங்களை ரஷியாவில் உள்ள ஆட்டமனர்ஜோமாஷ் நிறுவனத்தின் துணை நிறுவனங்களில் ஒன்றான ‘ஸியோ-போடல்ஸ்க்-கில்தான்’ நிறுவனம் வடிவமைத்து இருக்கிறது.

நீராவியில் உள்ள நீர் குமிழிகளை விலக்கி, நீராவியின் வெப்பக்கடத்தல் திறனை அதிகரித்து, குறைந்த அழுத்த நீராவியிலேயே அதிகபட்ச பலனை பெறுவதற்கான வாய்ப்புகளை இந்த சாதனங்கள் உருவாக்குகிறது.

இந்த சாதனம் ஒவ்வொன்றும் முறையே சுமார் 47 டன்கள் வரை எடையும், 6 மீட்டர் உயரம் மற்றும் 4 மீட்டர் விட்டமும் கொண்டதாகும். இது தொடர்ந்து 30 ஆண்டுகள் வரை உழைக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. #KudankulamNuclearPowerPlant #Russia 
Tags:    

Similar News