செய்திகள்

திருப்பூரில் தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி- கணவன், மனைவி தலைமறைவு

Published On 2018-10-20 11:47 GMT   |   Update On 2018-10-20 11:47 GMT
திருப்பூரில் தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட கணவன் மனைவி தலைமறைவாகி விட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் உள்ள பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் பாப்பணன் நகரை சேர்ந்த ரவிச்சந்திரன், அவரது மனைவி சுமதி ஆகியோர் வேலை பார்த்து வருகிறார்கள்.

இவர்கள் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் சுற்றுப்பகுதியில் குடியிருப்பவர்களிடம் வாரம் ரூ. 100 என்ற அடிப்படையில் தீபாவளி சீட்டு நடத்தினார்கள்.

இதில் ஏராளமானோர் பணம் செலுத்தினார்கள். 52 வாரம் முடிந்து 6,200 ரூபாய் முதிர்வு தொகை தருவதாக கணவன்-மனைவி கூறி இருந்தனர்.

ஆனால் சீட்டு முடிவடைந்து பணம் கொடுக்க வேண்டிய நிலையில் கணவன்-மனைவி தங்கள் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டனர். இதனால் சீட்டு பணம் செலுத்தியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள் திருப்பூர் வடக்கு போலீசில் புகார் செய்தனர். அவர்களில் 15 பேர் ரூ. 6 லட்சம் வரை மோசடி செய்ததாக புகார் தெரிவித்தனர். 100-க்கும் மேற்பட்டோர் பணம் செலுத்தி உள்ளதால் மோசடி தொகை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தலைமறைவான கணவன்-மனைவியை போலீசார் தேடி வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News