செய்திகள்

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் போராட்டம்

Published On 2018-10-16 15:57 GMT   |   Update On 2018-10-16 15:57 GMT
காரியாபட்டி அருகே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் போராட்டம் நடத்தினார்கள்.
காரியாபட்டி:

காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் சமத்துவபுரம் உள்ளது. இங்கு 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்ததில் சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளுக்குள்ளும், வீட்டைச் சுற்றியும் தண்ணீர் சூழ்ந்தது. அந்த கிராம மக்கள் காரியாபட்டி தாசில்தார் ராமநாதனிடம் முறையிட்டனர். தாசில்தார் பார்வையிட்டு அந்தந்த வீடுகளுக்கு முன்பு கிராவல் மண் அடிக்க கூறியுள்ளார். உடனே அவரவர் சொந்த செலவில் கிராவல் மண் அடித்துக் கொண்டார்கள்.

சமத்துவபுரத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியை சுற்றிலும் தண்ணீர் தேங்கியது. பள்ளியை சுற்றி உள்ள தண்ணீரை அப்புறப்படுத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை. தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடும் நிலவுகிறது. மாணவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணிப்பு செய்து பள்ளியின் முன்பு அமர்ந்து போராட்டம் செய்தனர். இந்த தகவல் அறிந்து வந்த தாசில்தார் ராமநாதன், சமத்துவபுரம் மக்களிடம் பேசி உடனடியாக பள்ளியை சுற்றி கிராவல் மண் அடிக்கப்படும் என்று தெரிவித்தார். அப்போது, காரியாபட்டி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இதனால் அவர் நேரில் வந்து உறுதி அளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

பின்னர் தாசில்தார் ராமநாதனின் முயற்சியால் உடனடியாக பள்ளி வளாகத்தில் மண் அடித்து சீரமைக்கப்பட்டது. இதனால் பிரச்சினை முடிவுக்கு வந்தது.

Tags:    

Similar News