செய்திகள்

தண்ணீர் லாரி மோதி 1½ வயது சிறுவன் பலி - உடலை தூக்கியபடி லாரியை விரட்டிச்சென்ற தாய்

Published On 2018-10-16 09:29 GMT   |   Update On 2018-10-16 09:29 GMT
கொளத்தூர் அருகே தண்ணீர் லாரி மோதி 1½ வயது சிறுவன் பலியானான். அவனது உடலை தூக்கியபடி சிறுவனின் தாய் லாரியை விரட்டிச்சென்ற காட்சி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
மாதவரம்:

வில்லிவாக்கம் வடக்கு ஜெகநாதபுரத்தில் வசித்து வருபவர் கலைவாணன். தள்ளுவண்டியில் வேர்க்கடலை வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களது 1½ வயது மகன் மோரிக்.

தற்போது மகாலட்சுமி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவர்களது சொந்த ஊர் திருவண்ணாமலை. கடந்த 2 வாரத்துக்கு முன்பு வில்லிவாக்கத்துக்கு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு மகாலட்சுமி வீட்டின் எதிரே நின்று கொண்டு மகன் மோரிக்குக்கு சாப்பாடு கொடுத்தார். அப்போது சிறுவன் மோரிக் ஓடி விளையாடியபடி சாலை அருகே நின்றான்.

அந்த நேரத்தில் அந்த வழியாக வந்த தண்ணீர் லாரி சாலையில் நின்ற மோரிக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயம் அடைந்த மோரிக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மகாலட்சுமி மகன் உடலை தூக்கிக் கொண்டு விபத்து ஏற்படுத்திய லாரியை விரட்டியபடி ஓடினார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் தண்ணீர் லாரியை மடக்கி பிடித்தனர்.

ஆத்திரமடைந்த பொதுமக்கள் லாரியின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். லாரி டிரைவர் உத்திரமேரூரை சேர்ந்த மணிகண்டனையும் தாக்கினர்.

திருமங்கலம் போக்குவரத்து போலீசார் மணிகண்டனை மீட்டு கைது செய்தனர். சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மகாலட்சுமி மகனின் உடலை தூக்கியபடி லாரியை பின்தொடர்ந்து செல்லும் பரிதாப காட்சி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News