செய்திகள்

அம்மா உணவங்களில் தரம் குறைவான உணவுகள் வழங்கினால் நடவடிக்கை- அமைச்சர் வேலுமணி எச்சரிக்கை

Published On 2018-10-15 10:37 GMT   |   Update On 2018-10-15 10:47 GMT
அம்மா உணவகங்களில் தரம் குறைந்த உணவுகளை விநியோகம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி எச்சரித்துள்ளார். #AmmaCanteens #MinisterSPVelumani
சென்னை:

தமிழகத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அடித்தட்டு மக்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்குவதற்காக அம்மா உணவகம் திட்டம் தொடங்கப்பட்டது. 

இந்த உணவகங்களில் காலையில் ஒரு ரூபாய்க்கு இட்லி, 5 ரூபாய்க்குப் பொங்கல் வழங்கப்பட்டது. மதிய வேளையில் சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், கறிவேப்பிலை  சாதம், கீரை சாதம் என அனைத்தும் தலா ரூ.5 ரூபாய்க்கு வழங்கப்பட்டது. இரண்டு சப்பாத்தி 3 ரூபாய் தான். உணவுகள் தரமாகவும் சுவையாகவும் இருப்பதுடன், விலை குறைவாகவும் கிடைத்ததால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

இந்நிலையில், சமீப காலமாக அம்மா உணவகங்களில் தரம் குறைந்த உணவுகள் வழங்கப்படுவதாக புகார் எழுந்தது. உணவகங்களில் கூட்டமும் குறையத் தொடங்கியது.

இதையடுத்து சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று திடீர் சோதனை மேற்கொண்டார். உணவுகளின் தரத்தை சோதனை செய்த அவர், தரமான உணவுகளை வழங்கும்படி ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த சோதனைக்குப் பிறகு, சிந்தாதிரிப் பேட்டை அம்மா உணவகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வேலுமணி, அம்மா உணவகங்களில் தரம் குறைந்த உணவுகளை விநியோகம் செய்தால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

தமழகம் முழுவதும் அம்மா உணவகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், முதல்வரின் ஒப்புதல்  கிடைத்ததும் உணவகங்கள் அதிகரிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். #AmmaCanteens  #MinisterSPVelumani
Tags:    

Similar News