செய்திகள்

கவர்னர் மாளிகை நேரடியாக பண வசூல் செய்யவில்லை- கிரண்பேடி விளக்கம்

Published On 2018-10-14 04:54 GMT   |   Update On 2018-10-14 04:54 GMT
சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் கவர்னர் மாளிகை எந்த நிதி வசூலும் செய்யவில்லை என்று கிரண்பேடி விளக்கம் அளித்துள்ளார். #PondicherryGovernor #Kiranbedi #Narayanasamy
புதுச்சேரி:

புதுவை அரசு சார்பில் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் நிறுவனங்கள், சமூக சேவை அமைப்புகளிடம் இருந்து நிதி வசூல் பெற்று பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

இதற்காக முதல்- அமைச்சர் தலைமையில் தனிக்குழு செயல்படுகிறது. ஆனால், இந்த திட்டத்தை கவர்னர் கிரண்பேடி தன்னிச்சையாக உருவாக்கி ரூ.85 லட்சம் வரை வசூல் செய்து இருக்கிறார்.

இது, விதிமுறைகள்படி தவறானது. இதில் முறைகேடு நடந்து இருக்கிறது என்று நாராயணசாமி குற்றம் சாட்டினார்.

இதற்கு கவர்னர் கிரண்பேடி பதில் அளித்து கூறியதாவது:-

சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் கவர்னர் மாளிகை எந்த நிதி வசூலும் செய்யவில்லை.

புதுவையில் உள்ள ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் குறைந்தபட்சம் 6 முதல் 15 ஆண்டுகளாக தூர் வாரப்படவில்லை. நிதி தட்டுப்பாடு காரணமாக பிரதான பாசன கால்வாய், கிளை கால்வாய்களை பொதுப்பணித்துறையால் தூர்வார முடியவில்லை.

இந்த நிலையில் “நீர்வளமிக்க புதுச்சேரி” என்ற இலக்குடன் நீர் நிலைகளை தூர் வாரும் பணியை கவர்னர் மாளிகை மேற்கொண்டு வருகிறது.

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக நீர்நிலைகளையும், பாசன கால்வாய்களையும் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமுதாய சிந்தனை மிக்கவர்கள், கொடையாளர்கள், தொழில் நிறுவனங்கள் உதவியுடன் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

யாரையும் கட்டாயப்படுத்தி இப்பணியை மேற்கொள்ள கவர்னர் மாளிகை வலியுறுத்தவில்லை. இந்த பணி நடைபெறும்போது அரசு அல்லது அரசு முகமைகள் மூலமாக எந்வித பணபரிமாற்றமும் நடப்பதில்லை. கொடையாளர்கள், பணியை மேற்கொள்ளும் தன்னார்வ நிறுவனங்கள் இடையே மட்டுமே பணபரிமாற்றம் நடக்கிறது.

எவ்வித நிதி பரிமாற்றமும் இல்லாமல் பொதுப்பணித்துறை நீர்நிலைகளை தூர்வாரும் பணியை மேற்கொண்டு வருகிறது. சமுதாய பங்களிப்புடன் இதுவரை 25 பாசன கால்வாய்கள் சுமார் 84 கி.மீ. தொலைவுக்கு தூர்வாரப்பட்டுள்ளன.

இந்த பணியை மேற்கொள்ள கவர்னர் மாளிகை ஊக்கியாக மட்டுமே செயல்படுகிறது. பணம் எதையும் கவர்னர் மாளிகை நேரடியாக பெறவில்லை.

பணபரிமாற்றமே நடைபெறாமல் இருக்கும் போது, இதில் ஊழல் நடக்கிறது என்கிற குற்றச்சாட்டை எப்படி ஏற்க முடியும்? குற்றச்சாட்டுகள் குற்றச்சாட்டுகளாக மட்டுமே இருந்து கொண்டு இருக்கும்.

கவர்னரின் ஆணையர் மற்றும் செயலராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான தேவநீதிதாஸ், கவர்னர் மாளிகையில் பணியை தொடர வேண்டும் என்று நான் விரும்பினேன். இதனால் மத்திய உள்துறை, மாநில நிதித்துறை ஆகியவற்றின் ஒப்புதலுடன் கவர்னரின் ஆலோசகராக அதாவது கவர்னரின் சிறப்பு அதிகாரியாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான ஆணையை புதுவை அரசின் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ளார். இதன்படி தான் கவர்னரின் சிறப்பு அதிகாரியாக தேவநீதிதாஸ் தொடர்கிறார்.

யூனியன் பிரதேசங்களின் சட்டம் 1963, புதுச்சேரி சட்ட விதிகள் 1963 ஆகியவற்றின்படி பணிகளை நியமிப்பதில் கவர்னர் தான் அதிகாரம் பெற்றவர். எனவே, நீர்நிலைகளை தூர் வாரியது, சிறப்பு அதிகாரியை நியமித்ததில் எவ்வித அதிகார துஷ்பிரயோகமும், முறைகேடும் நடக்கவில்லை.

இவ்வாறு கிரண்பேடி கூறினார்.  #PondicherryGovernor #Kiranbedi #Narayanasamy
Tags:    

Similar News