செய்திகள்

விழுப்புரத்தில் அரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்து வாலிபர் ரகளை- டாக்டர்கள், நர்சு போராட்டம்

Published On 2018-10-13 10:19 GMT   |   Update On 2018-10-13 10:19 GMT
அரசு ஆஸ்பத்திரிக்குள் வாலிபர்கள் புகுந்து அடிக்கடி ரகளை செய்வதை தடுக்க வேண்டும், போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி டாக்டர், நர்சுகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்:

விழுப்புரம் சிக்னல் அருகே அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு 24 மணி நேரம் செயல்படக்கூடிய அவரச சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு மற்றும் பல பிரிவுகள் உள்ளன.

இந்த ஆஸ்பத்திரிக்கு விழுப்புரம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த ஏராளமான பேர் சிகிச்சை பெற வருகின்றனர். இந்த ஆஸ்பத்திரியின் காவலாளியாக ராஜா (வயது 35). என்பவர் நேற்று இரவு இருந்தார்.

இரவு 11 மணியளவில் விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள ஜி.ஆர்.பி. தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் (28) என்ற வாலிபர் குடிபோதையில் ஆஸ்பத்திரியின் கேட்டில் நின்று கொண்டு காவலாளியிடம் கதவை திறக்கும்படி கூறினார். ஆனால் ராஜா கதவை திறக்காமல் இருந்தார்.

அப்போது ஆத்திரம் ராமச்சந்திரன் கேட்டின் கதவை திறந்துகொண்டு உள்ளே புகுந்தார். பின்பு பிரசவ வார்டு அருகே சென்ற அவர் அங்கு இருந்த கதவை உடைத்து ரகளை செய்தார். அப்போது அந்த அறையில் இருந்த நர்சுகள் கிரேசி, வசந்தி, மலர்விழி மற்றும் டாக்டர் மணிகண்டன் ஆகியோர் அந்த வாலிபரிடம் ஏன் இங்கு வந்து ரகளை செய்கிறீர்கள் என்று தட்டிக்கேட்டனர். அவர்களையும் ராமச் சந்திரன் ஆபாசமாக பேசினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அங்கு இருந்த நர்சுகள் அலறிஅடித்துக்கொண்டு ஆஸ்பத்திரி அருகில் இருந்த புறக்காவல் நிலையத்திற்கு சென்று புகார் கூறினர். இதை அறிந்ததும் ராமச்சந்திரன் அங்கிருந்து ஓடிவிட்டார். பின்பு அவர் சிறிது நேரம் கழித்து தனது அண்ணன் இளையபெருமாள் (29), உறவினர் ஸ்ரீகாந்த் (32) ஆகியோருடன் மீண்டும் ஆஸ்பத்திரிக்கு வந்தார். பின்பு அவர்கள் அங்கிருந்த காவலாளி ராஜாவை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து காவலாளி ராஜா விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இன்று காலை டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பணிக்கு வழக்கம் போல் வந்தனர். ஆஸ்பத்திரிக்குள் புகுந்து வாலிபர் காவலாளியை தாக்கி விட்டு ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் திடீரென்று பணி செய்யாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

7 டாக்டர்கள், 18 நர்சுகள், 30 ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஆஸ்பத்திரிக்குள் வாலிபர்கள் புகுந்து அடிக்கடி ரகளை செய்வதை தடுக்க வேண்டும், போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி அவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி கோ‌ஷம் எழுப்பினர். ஆனால் அவசர சிகிச்சை பிரிவு மட்டும் இயங்கியது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் காமராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், பட்டாபிராமன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்பு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள், நர்சுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆஸ்பத்திரிக்குள் புகுந்து காவலாளியை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் சாந்தி கூறினார். அதனை போலீசார் ஏற்றுக்கொண்டனர்.

அதனைதொடர்ந்து போராட்டம் நடத்திய டாக்டர்கள், நர்சுகள் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 3 மணி நேரம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆஸ்பத்திரிக்கு வந்த நோயாளிகள் பெரும் அவதி அடைந்தனர்.

இதற்கிடையே ஆஸ்பத்திரிக்குள் புகுந்து காவலாளி ராஜாவை தாக்கிய ராமச்சந்திரன், இளையபெருமாள், ஸ்ரீகாந்த் ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவான 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

ஆஸ்பத்திரியில் புகுந்து தாக்குதலில் காயம் அடைந்த காவலாளி ராஜாவுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

ஆஸ்பத்திரிக்குள் புகுந்து காவலாளியை தாக்கிய சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
Tags:    

Similar News