செய்திகள்

மலேசிய எம்பி தேர்தல்- முன்னாள் துணை பிரதமருக்கு கமல்ஹாசன் ஆதரவு

Published On 2018-10-12 10:50 GMT   |   Update On 2018-10-12 10:50 GMT
மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன், மலேசியாவில் நடைபெற உள்ள எம்.பி. தேர்தலில் முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹிமுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். #KamalHaasan #AnwarIbrahim
சென்னை:

மலேசியாவின் போர்ட்டிக் சன் நாடாளுமன்ற எம்.பி.யாக இருந்த டேன்யல் பாலகோபால் அப்துல்லா தமது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. நாளை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

இத்தொகுதியில் முன்னாள் துணைப் பிரதமர் அன்வார் இப்ராஹிம், பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். போர்ட்டிக்சன் தொகுதியில் மொத்தம் 75,000 வாக்காளர்கள் உள்ளனர்.

இவர்களில் தமிழர்கள் உட்பட 21.4 சதவீதம் பேர் இந்தியர்கள். இதனால் இடைத்தேர்தல் பிரசாரத்தில் தமிழ் சினிமா பாடல்கள் முக்கியத்துவம் பெற்றன.

தமிழகத்தில் புதிதாக மக்கள் நீதி மய்யம் அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள கமல்ஹாசன், அன்வர் இப்ராஹிமுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.


வீடியோ மூலமாக அன்வாருக்கு கமல்ஹாசன் ஆதரவை கோரியிருக்கிறார். அந்த வீடியோவில், அன்வர் இப்ராஹிமிக்கு அநியாயமான சிறைவாசத்தில் இருந்து விடுதலை கிடைத்திருப்பது, அவருக்கு சேர வேண்டிய புகழ் மீண்டும் அவரை வந்தடைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

எளிய மக்களுக்காக குரல் கொடுக்கும் தலைவர்களின் எழுச்சி எப்போதுமே மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாகவே இருக்கிறது. அப்படிப் பார்க்கையில் அன்வரின் இந்த மறு எழுச்சி பெரிய நம்பிக்கையை எனக்கு அளிக்கிறது.

வருகின்ற சனிக்கிழமை போர்ட்டிக்சனில் நடைபெறும் தேர்தலில் ஒரு புதிய அரசியல் அத்தியாயத்தை மலேசியா எழுத இருக்கிறது. அந்த அத்தியாயத்தில் சகோதரர் அன்வர் பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் மலேசிய அரசியல் சரித்திரத்தில் புதிய அத்தியாயங்கள் எழுதப்படும் என நான் நம்புகிறேன். மலேசிய இந்திய உறவும் வரலாற்றுச் சிறப்புமிக்க மலேசிய தமிழக உறவும் கண்டிப்பாய் வலுவடையும் என நான் நம்புகிறேன்.

மலேசிய மக்களின் இந்த புதிய பயணத்துக்கு எனது வாழ்த்துகள். எங்கள் கட்சியான மக்கள் நீதி மய்யத்தின் வாழ்த்துகள்” என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனின் இந்த வீடியோ மலேசிய இந்தியர்களிடையே வைரலாக பரவி வருகிறது. #MakkalNeedhiMaiam #KamalHaasan
Tags:    

Similar News