செய்திகள்

ரத்த பரிசோதனை மையத்தில் ஊழியர் இல்லாததால் அரசு ஆஸ்பத்திரியில் பெண்கள் போராட்டம்

Published On 2018-10-12 07:50 GMT   |   Update On 2018-10-12 07:50 GMT
பெரியபாளையம் அருகே ரத்த பரிசோதனை மையத்தில் ஊழியர் இல்லாததால் அரசு ஆஸ்பத்திரியில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியபாளையம்:

பெரியபாளையம் கோவில் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது.

இங்கு ‘போஜன் அபியான்’ திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு ரத்த சோகை பரிசோதனை செய்யப்படும் என்று அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஆலப்பாக்கம், அத்திவாக்கம், ஆமிதா நல்லூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

ஆனால், ரத்த பரிசோதனை செய்யும் ஊழியர் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு பயிற்சி வகுப்புக்கு சென்றுவிட்டதாக தெரிகிறது. இதனால் மதியம் வரை காத்திருந்த பெண்கள் பணியில் இருந்த டாக்டர்களிடம் வாக்குவாதம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பரிசோதனை சிறப்பு முகாமுக்கு எங்களை வர சொல்லி விட்டு டெக்னீசயனை ஏன்? பயிற்சி வகுப்புக்கு அனுப்பினீர்கள் என்று சரமாரியாக கேள்வி கேட்டனர்.

இதனால் ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் பெரியபாளையம் போலீசார் விரைந்து வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்களிடம் சமரசம் செய்தனர்.

பின்னர் யானம்பாக்கத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து ரத்த பரிசோதனை செய்யும் டெக்னீசயன் வரவழைக்கப்பட்டு பரிசோதனை செய்யும் பணி நடந்தது.
Tags:    

Similar News