செய்திகள்

புஷ்கர விழா தொடக்கம்- பாபநாசத்தில் கவர்னர் புனித நீராடினார்

Published On 2018-10-11 07:03 GMT   |   Update On 2018-10-11 07:03 GMT
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் தாமிரபரணி புஷ்கர விழாவை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்து புனித நீராடினார். #ThamirabaraniMahaPushkaram #TNGovernor #BanwarilalPurohit
நெல்லை:

தாமிரபரணி புஷ்கர விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை 8.50 மணிக்கு சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் தென்காசிக்கு வந்தார். அவருக்கு நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பாக கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தென்மண்டல ஐ.ஜி.சண்முக ராஜேஸ்வரன், டி.ஐ.ஜி. கபில்குமார்சரத்கர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் மற்றும் தென்காசி டி.எஸ்.பி. மணிகண்டன், ஆர்.டி.ஓ.ராஜேந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டு கவர்னரை வரவேற்றனர். இதை தொடர்ந்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் குற்றாலத்துக்கு சென்றார்.

அங்குள்ள விருந்தினர் மாளிகையில் அவர் சிறிதுநேரம் ஓய்வெடுத்தார். இதன்பிறகு அவர் பாபநாசம் புறப்பட்டு சென்றார். பாபநாசம் வந்த கவர்னருக்கு துறவியர்கள், பண்டிதர்கள் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் பாபநாசம் கோவில் முன்புள்ள இந்திரகீல தீர்த்தப்படித்துறையில் புனித நீராடினார். பின்னர் அவர் சேனைத்தலைவர் திருமண மண்டபத்தில் அகில பாரதிய துறவியர் சங்கம் சார்பாக நடைபெற்ற துறவியர் மாநாட்டில் அவர் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் புஷ்கர விழாவை தொடங்கிவைத்து விழா மலரை வெளியிட்டு அவர் பேசினார்.

பாபநாசம் கோவில் முன்புள்ள இந்திரகீல தீர்த்தப்படித்துறையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் புனித நீராடிய போது எடுத்தபடம்.

இதன்பிறகு கவர்னர் பன்வாரிலால் புரோகித் நெல்லை வந்தார். நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள விருந்தினர் மாளிகையில் அவர் ஓய்வெடுத்தார். மாலை 5.15 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் நெல்லை அருகன்குளத்தில் உள்ள எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலைக்கு செல்கிறார்.

அங்கு கோசாலையை பார்வையிட்டு அங்குள்ள யாகசாலையில் நடைபெறும் சிறப்பு யாகத்தில் கலந்துகொள்கிறார். பின்னர் அவர் அங்குள்ள ஜடாயுதீர்த்த படித்துறையில் தாமிரபரணி மகா ஆரத்தியை தொடங்கி வைக்கிறார். பின்பு அவர் அங்கிருந்து புறப்பட்டு திருப்புடைமருதூர் செல்கிறார்.

அங்கு நடைபெறும் புஷ்கர விழாவில் அவர் கலந்துகொள்கிறார். பின்னர் அவர் நெல்லை வந்து வண்ணார்பேட்டை சுற்றுலா மாளிகையில் தங்குகிறார். நாளை காலை அவர் தூத்துக்குடி மாவட்டத்துக்கு புறப்பட்டு செல்கிறார். கவர்னர் வருகையை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #ThamirabaraniMahaPushkaram #TNGovernor #BanwarilalPurohit
Tags:    

Similar News