செய்திகள்

குட்கா ஊழல் - விழுப்புரம் சூப்பிரண்டுக்கு சிபிஐ சம்மன்

Published On 2018-10-11 05:59 GMT   |   Update On 2018-10-11 05:59 GMT
குட்கா ஊழல் வழக்கில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி உள்ளதையடுத்து இன்று அவர் விசாரணைக்காக ஆஜராக உள்ளார். #GutkhaScam #CBI
சென்னை:

குட்கா ஊழல் வழக்கில் செங்குன்றத்தில் குட்கா குடோன் அதிபர் மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் உள்ளிட்டோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. உதவி கமி‌ஷனர் மன்னர்மன்னன், இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோர் மீதும் புகார் கூறப்பட்டுள்ளது.

இதில் இன்ஸ்பெக்டர் சம்பத்திடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனையடுத்து அவர் முன்ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இதற்கு பதில் அளிக்குமாறு சி.பி.ஐ.க்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கும் சி.பி.ஐ. நேற்று சம்மன் அனுப்பி உள்ளது. இதனை ஏற்று அவர் இன்று சென்னை பெசன்ட் நகரில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக உள்ளார்.

அப்போது குட்கா விவகாரம் பற்றி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். இந்த விசாரணையின்போது ஜெயக்குமார் தனக்கு தெரிந்த தகவல்களை சி.பி.ஐ.யிடம் தெரிவிக்க உள்ளார்.

செங்குன்றத்தில் உள்ள குட்கா குடோனில் சூப்பிரண்டு ஜெயக்குமார், சென்னையில் பணியாற்றிய போது சோதனை நடத்தியவர். இவர்தான் குட்கா குடோனை கண்டுபிடித்து செங்குன்றம் போலீசிடம் ஒப்படைத்தார். இதன்பிறகே குட்கா விவகாரத்தில லஞ்ச புகார் கூறப்பட்டுள்ளது. முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் சில நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், ஜெயக்குமார் மீது குற்றம் சாட்டி இருந்தார்.

குட்கா விவகாரம் தொடர்பாக ஜெயக்குமாருக்கு பல தகவல்கள் தெரியும் என்று அவர் கூறியிருந்ததன் அடிப்படையில்தான் ஜெயக்குமாருக்கு இப்போது சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.



போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மீது முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் குற்றம் சாட்டியபோது அளித்த பேட்டியில் நான் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறியிருந்தார்.

சி.பி.ஐ. விசாரணையின் போது ஜெயக்குமார் சோதனை தொடர்பான தகவல்களையும், தனது விளக்கத்தையும் அளிக்க உள்ளார். #GutkhaScam #CBI

Tags:    

Similar News