செய்திகள்

நக்கீரன் கோபால் எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத்தாக்கல்

Published On 2018-10-09 10:46 GMT   |   Update On 2018-10-09 10:55 GMT
ஆளுநரை பணியில் தலையிட்டதாக கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபால் தரப்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #NakkheeranGopal
சென்னை:

நக்கீரன் வார இதழின் ஆசிரியர் கோபால் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்டு இருக்கும் பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் மாளிகையை தொடர்புபடுத்தி கட்டுரை வெளியானதால் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் நக்கீரன் கோபால் மீது 124 சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் பணியில் தலையிடுவது போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர் மீது வழக்குகள் பதியப்பட்டு தற்போது நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், நக்கீரன் கோபால் தரப்பில் இருந்து முன்ஜாமீன் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் பி.டி.பெருமாள் நக்கீரன் தரப்பில் ஆஜராகி வாதிட்டு வருகிறார். எழும்பூர் 13-வது நீதிமன்றத்தில் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற வழக்குவிசாரணை சிறிது நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையின்போது, நக்கீரன் இதழில் வெளியான கட்டுரையால் ஆளுநர் பணியில் என்ன இடையூறு ஏற்பட்டது என்பதை விளக்க வேண்டும் எனவும், காலதாமதாக நடவடிக்கை எடுப்பதற்கான உள்நோக்கம் என்ன? எனவும் நக்கீரன் கோபால் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டுள்ளார்.

இந்நிலையில், எழும்பூர் நீதிமன்றத்தில் ஊடக பிரதிநிதியாக ஆஜரான இந்து என்.ராம், 124 பிரிவின் கீழ் வராத ஒரு வழக்கில் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை என்றும், இந்த வழக்கில் நீதிமன்ற காவல் என தீர்ப்பு வழங்கப்பட்டால் அது தவறான உதாரணம் ஆகிவிடும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். #NakkheeranGopal
Tags:    

Similar News