செய்திகள்

கனமழைக்கு இடிந்த வீடு - 4 பேர் உயிரை காப்பாற்றிய வளர்ப்பு பூனை

Published On 2018-10-07 05:25 GMT   |   Update On 2018-10-07 05:25 GMT
வத்தலக்குண்டு அருகே கனமழையால் வீடு இடிந்த நிலையில், அந்த வீட்டில் இருந்த 4 பேர் தங்களது வளர்ப்பு பூனையால் உயிர் தப்பியுள்ளனர்.

வத்தலக்குண்டு:

வத்தலக்குண்டு மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் நீர்தேங்கி வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

மேலகோவில்பட்டி இந்திராநகரை சேர்ந்தவர் கோவிந்தன்(வயது48). இவரது மனைவி ராஜாத்தி. இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர்கள் வீட்டில் பூனை ஒன்றை பாசமாக வளர்த்து வருகின்றனர். சம்பத்தன்று குடும்பத்துடன் கோவிந்தன் வீட்டில் தூங்கிக்கொண்டிந்தார்.

அப்போது அதிகாலை 5 மணியளவில் வளர்ப்பு பூனை வழக்கத்திற்கு மாறாக சத்தம்போட்டது. இதனால் கோவிந்தன் குடும்பத்தினர் என்னவோ ஏதோ என்று பதறியபடி வீட்டை விட்டு வெளியே வந்தனர்.

ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.

பூனை சத்தம் போட்டு வெளியே வந்ததால் 4 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தனர். அதிர்ச்சியில் இருந்து மீளாத 4 பேரும் வளர்ப்பு பூனையை கண்டு கண்கலங்கினர். இதுகுறித்து கால்நடை டாக்டர்கள் தெரிவிக்கையில், பூனை, நாய் போன்ற விலங்குகளுக்கு மனிதர்களின் நியூரான்களை விட ஒலி அளவுகளை விரைவாக உணரும் தன்மை உடையது.

இதனாலேயே பூனைக்கு ஆபத்து ஏற்படும் உணர்வு ஏற்பட்டதால் அதிக சத்தம்போட்டு தன்னை வளர்த்த குடும்பத்தை காப்பாற்றியுள்ளது என்றனர்.

Tags:    

Similar News