செய்திகள்

களியக்காவிளை அருகே காங்கிரசார் திடீர் சாலை மறியல்- காங் எம்எல்ஏக்கள் பங்கேற்பு

Published On 2018-10-06 15:16 GMT   |   Update On 2018-10-06 15:16 GMT
குமரி மேற்கு மாவட்ட பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்க கோரி காங்கிரசார் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியலில் காங் எம்எல்ஏக்களும் பங்கேற்றனர். #Congress
குழித்துறை:

குமரி மேற்கு மாவட்ட பகுதியில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பயன்படாத வகையில் இருப்பதாகவும், அவற்றை உடனே சீரமைக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.

இதனை வலியுறுத்தி இன்று காலை களியக்காவிளையை அடுத்த கோழிவிளை சந்திப்பில் காங்கிரஸ் கட்சியின் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோழிவிளை- மங்காடு சாலை, கணபதியான்கடவு- பொன்னப்பர் நகர் சாலை, கோளஞ்சேரி- நடைகாவு சாலை குறுகியதாக உள்ளது. இதனை விரிவுபடுத்த வேண்டும். பழுதான சாலைகளை சீரமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ராஜேஷ் குமார் தலைமையில் நடந்த மறியல் போராட்டத்தில் குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரின்ஸ் கலந்து கொண்டார்.

இவர்களுடன் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் பொது செயலாளர் ஸ்டுவர்ட் உள்பட ஏராளமான தொண்டர்களும் பங்கேற்றனர். அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

காங்கிரசாரின் திடீர் போராட்டத்தை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. #Congress
Tags:    

Similar News