செய்திகள்

போலீசார் தாக்க முயன்றதால் நடுரோட்டில் தீக்குளிக்க முயன்ற இலங்கை அகதி

Published On 2018-10-06 19:55 IST   |   Update On 2018-10-06 19:55:00 IST
பெரம்பலூரில் போலீசார் தாக்க முயன்றதால் நடுரோட்டில் இலங்கை அகதி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குன்னம்:

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு வசித்து வரும் சிவலிங்கம் என்பவரின் மகன் சதீஷ் (வயது 32) இன்று காலை பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை வழிமறித்த போக்குவரத்து போலீசார், வாகனத்திற்கான உரிமங்களை கேட்டபோது அவரிடம் இல்லை. இதையடுத்து வீட்டிற்கு சென்று ஆவணங்களை எடுத்து வந்து காண்பித்தார். ஆனால் போலீசார், உரிமங்கள் இல்லாமல் வாகனத்தை ஓட்டி வந்ததால் அபராதம் விதித்து விட்டோம். எனவே அதனை செலுத்தி விட்டு செல்லுங்கள் என்று கூறியுள்ளனர்.

ஆனால் சதீஷ், என்னிடம் அபராதம் செலுத்துவதற்கு பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் போலீசாருக்கும், சதீசுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் தாக்க முயற்சித்த போது பயந்து போன சதீஷ், போலீசாரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.

பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவத்தால் அவமான மடைந்த சதீஷ், வீட்டிற்கு சென்று மண்எண்ணை கேனை எடுத்துக்கொண்டு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே வந்தார்.

பின்னர் போலீசார் , பொது மக்கள் முன்பு திடீரென உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைக்க முயன்றார். பொதுமக்கள் சுதாரித்து கொண்டு சதீஷ் தீக்குளிப்பதை தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
Tags:    

Similar News