செய்திகள்

ரெட் அலர்ட் குறித்து மக்கள் அச்சமடைய தேவையில்லை - வருவாய் நிர்வாக ஆணையர் பேட்டி

Published On 2018-10-05 06:13 IST   |   Update On 2018-10-05 06:13:00 IST
தமிழகத்துக்கு விடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட் குறித்து மக்கள் அச்சமடைய தேவையில்லை என வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார். #TNRain #TNRedAlert
சென்னை:

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த பகுதியாக உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்த 48 மணி நேரத்தில் இது புயலாக மாறி வடமேற்கு திசையில் நகரும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது. 
 
கடலோரப் பகுதிகளில் ஏற்படும் மேலடுக்கு சுழற்சியினால் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும். அதன்பிறகு மேலும் 3 நாட்களுக்கு பலத்த மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்தது.

மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையே, தமிழகத்தில் வரும் 7-ம் தேதி அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறைந்த நேரத்தில் மிக அதிகளவு கனமழை பெய்வதையே ரெட் அலர்ட் என அழைக்கப்படுகிறது. அன்றைய தினம் சுமார் 25 செ.மீ அளவு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்கும்படியும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பேரிடர் மேலாண்மைத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் விடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட் குறித்து மக்கள் அச்சமடைய வேண்டாம் என்று வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார்.



இதுதொடர்பாக அவர் சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு 7-ம் தேதி ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 89 அணைகளில் 15 பெரிய அணைகள் நிரம்பி உள்ளன. ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அணைக்கு நீர்வரத்து, இருப்பு பற்றிய தகவலை வழங்க வேண்டும் என அணை பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

நீர் நிலைகளில் உடைப்புகள் ஏற்பட்டால் அதனை உடனடியாக சரிசெய்ய 5 லட்சம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளன. ஏற்கனவே மழையால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கடலோர மாவட்டங்களில் 60-80 பேரும், இதர மாவட்டங்களில் 45-50 பேரும் மீட்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர். நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தேவையெனில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவும் அழைத்துக் கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். #TNRain #TNRedAlert 
Tags:    

Similar News